டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-மொராக்கோ இடையிலான ஆட்டம் இன்று தொடக்கம்

லக்னோ,

டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் 2 சுற்றில் இந்தியா-மொராக்கோ அணிகள் மோதும் ஆட்டம் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இந்த குலுக்கல் நிகழ்ச்சியை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதன்படி முதல் நாளான இன்று நடைபெறும் ஒற்றையர் பிரிவு முதலாவது ஆட்டத்தில் உலக தரவரிசையில் 365-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சசிகுமார் முகுந்த், 557-வது இடத்தில் இருக்கும் 20 வயதான யாசின் டிலிமியுடன் (மொராக்கோ) மோதுகிறார். இரண்டாவது ஆட்டத்தில் தரவரிசையில் 156-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல், 511-வது இடத்தில் உள்ள ஆடம் மொன்டிரை (மொராக்கோ) எதிர்கொள்கிறார்.

நாளை நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி இணை, எலியாட் பென்செட்ரிட்-யோனிஸ் லலாமி லாரோஸ்சி ஜோடியை சந்திக்கிறது. மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல்-யாசின் டிமிலி, சசிகுமார் முகுந்த்-ஆடம் மொன்டிர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர். முதலாவது நாள் ஆட்டம் பிற்பகல் 2 மணிக்கும், கடைசி நாள் ஆட்டம் பகல் 1 மணிக்கும் தொடங்கி நடைபெறும். வெயில் தாக்கம் மற்றும் காற்றில் ஈரப்பதம் குறைவு காரணமாக அதிக புழுக்கம் நிலவுவதால் இந்த போட்டி தொடங்கும் நேரம் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேவிஸ் கோப்பை போட்டி உத்தரபிரதேசத்தில் 23 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அரங்கேறுகிறது. இந்த போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.