பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் “என் மண் என் மக்கள்” பயணம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், “மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமை தொகை தரப்படும் என்று திமுக ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், அவர்களுக்கு குடும்பத் தலைவிகள் என்றாலே ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆனால் நம்மைப் பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் நமக்கு ஐயம் கிடையாது. 28 மாதங்களாக குடும்ப தலைவிகள் யார் என்று தேடி தேடி கண்டுபிடித்தார்கள். ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகளாக தமிழ்நாட்டில் இரண்டரை கோடி பேர் இருந்திருக்கிறார்கள். அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை தரப்படும் என்று ஒவ்வொரு மேடையிலும் பேசினார்கள். தற்போது அது ஒரு கோடியே 6 லட்சம் ஆக மாறி நிற்கிறது.

இதற்கான தொகையை மத்திய அரசு வழங்கிய எஸ்.சி\எஸ்டி சப்ளையில் இருந்து 3000 கோடியை செலவு செய்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய தவறு. மத்திய அரசாங்கம் அந்த தொகையை திரும்ப கேட்டிருக்கிறது. அப்பொழுது தமிழக அரசாங்கம் நிச்சயம் சிக்கலில் மாட்டும்.
“என் மண் என் மக்கள்” யாத்திரை தொடங்கிய இந்த 40 நாள்களில் இரண்டு முறை பிரதமர் என்னிடம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசினார். இரண்டு முறை பேசும்போதும் மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை, யாத்திரை எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது பற்றி எல்லாம் பேசினார். நான் அவருடன் ஆங்கிலத்தில் தான் உரையாடினேன். எனக்கு உண்மையாகவே இந்தி தெரியாது, ஒரு மாநில தலைவராக இந்தியாவின் உச்சபட்ச பதவியில் இருக்கும் பிரதமரிடம் நான் ஆங்கிலத்தில் தான் பேசினேன். பிரதமர் வருத்தப்படுகிறார், எனக்கு தமிழ் பேச தெரியவில்லையே என்று. பிரதமர் மட்டும் தமிழை கற்றுக் கொண்டு ஒரே ஒரு உரையை தமிழில் நிகழ்த்தி விட்டால், திமுக அன்றோடு காலி.

ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் உள்ளது அரளிக் முத்து குளம். 70 ஏக்கர் பரப்பளவு உள்ள அக்குளத்தை எப்படியேனும் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்று சக்கரபாணி நினைத்துக் கொண்டிருக்கிறார். சிப்காட்டின் 920 ஏக்கரின் மையப்பகுதி தான் இந்த அரளிக் முத்து குளம். அரளிக் முத்து குளத்தை நீங்கள் தொட வேண்டும் என்றால் எங்களை தாண்டி நீங்கள் முதலில் வரவேண்டும். தமிழகத்தில் இருந்து 50 ஆயிரம் போலீஸ்காரர்கள் நீங்கள் இறக்கினாலும் அந்த குளத்திலிருந்து ஒரு கைப்பிடி மண்ணைக் கூட உங்களால் எடுக்க முடியாது.
அப்படி அக்குளத்தை நெருங்க வந்தீர்கள் என்றால் பாதயாத்திரை எங்கே நடந்தாலும் அதை நிறுத்தி விட்டு நேரடியாக குளத்திற்கு வந்து போராட்டத்தை நடத்துவோம்.
ஒரு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று பேசினார்.