வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங் :சீனாவில், காணாமல் போன ராணுவ அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்பு, 65, மத்திய ராணுவ கமிஷன் கூட்டத்தில் பங்கேற்காததால், பதவிநீக்கம் அல்லது கைது செய்யப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.
நம் அண்டை நாடான சீனாவில், அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில், சீன கம்யூ., கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு வெளியுறவு அமைச்சராக இருந்த கின் கேங், 57, கடந்த ஜூலையில் மாயமானார்.இதையடுத்து, சீன வெளியுறவு விவகார கமிஷன் இயக்குனராக இருந்த வாங் யீ, வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதிபர் ஷீ ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான, ராணுவ அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்புவை, இம்மாத துவக்கத்தில் இருந்து காணவில்லை.
கடந்த 7 – 8ல், வியட்நாம் ராணுவ அதிகாரிகளை கூட அவர் சந்திக்கவில்லை. மேலும், எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில், மத்திய ராணுவ கமிஷன் கூட்டம் நடந்தது. மிக முக்கிய கூட்டமான இதில், ராணுவ அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்பு பங்கேற்கவில்லை.
கூட்டம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான வீடியோவில், ஜெனரல் லீ ஷாங்பு தென்படவில்லை. இதையடுத்து, ராணுவ அமைச்சர் பதவியில் இருந்து ஜெனரல் லீ ஷாங்பு பதவி நீக்கம் அல்லது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.
மத்திய ராணுவ கமிஷன் கூட்டத்தில், ஜெனரல் லீ ஷாங்பு பங்கேற்க முடியாமல் போனதற்கான காரணமும் வெளியிடப்படவில்லை. எனினும், சீன ராணுவ இணையதளத்தில், மத்திய ராணுவ கமிஷன் உறுப்பினராக, ஜெனரல் லீ ஷாங்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஜூலையில் இருந்து, அதிபர் ஷீ ஜின்பிங்கிற்கு நம்பிக்கைக்குரிய இரு அமைச்சர்கள் காணாமல் போயுள்ளது, சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement