“வாழும் பெரியார் `இபிஎஸ்'… சுயமரியாதை சுடரை அணைத்த ஸ்டாலின்!" – ஆர்.பி.உதயகுமார் சொல்வதென்ன?

“மொழி போராட்டத்திற்காக கைக்குழந்தையுடன் தாயும் சிறைக்கு செல்லும் வரலாற்றை தந்தை பெரியார் உருவாக்கினார்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி. உதயகுமார்

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தந்தை பெரியார் தமிழகத்திற்கு மறுமலர்ச்சி, புதிய பாதை, சுயமரியாதையை ஏற்படுத்தினார். பெண்களுக்கு கல்வி உரிமை, சொத்தில் உரிமை, இளம்பெண் திருமணம் எதிர்ப்பு, தேவதாசி முறை ஒழிப்பு என பல்வேறு புரட்சிகளை செய்தார்.

கல்விதான் பெண்களின் விடுதலைக்கு திறவுகோல் என கூறினார். பெண்களும் அரசியலுக்கு வரலாம் என்ற உணர்வுக்கு வித்திட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரியார் பேச்சைக் கேட்டு பெண்களும் போராடினர்கள். இதன் மூலம் 75 பெண்களும், கைக்குழந்தைகளுடன் 32 பேரும் கைதுசெய்யப்பட்டனர். பெண்களை போராட தூண்டியதற்காக 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் பெரியார்.

பெரியார்

மொழி போராட்டத்திற்காக கைக்குழந்தையுடன் தாயும் சிறைக்குச் சென்ற வரலாற்றை தந்தை பெரியார் உருவாக்கினார். பெரியாரின் கருத்துகளை பேறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் ஆகியோர் மக்களிடம் எடுத்துச் சென்றார்கள் .

ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார். அதனை அன்னை தெரசா பாராட்டினார், அதேபோல் பெண் கல்வியை ஊக்குவிக்க பல திட்டங்களை கொண்டு வந்தார். குடும்ப பிரச்னைகளை தீர்க்க மகளிர் காவல் நிலையங்களை உருவாக்கினார். தந்தையின் பெயரைப்போல தாயின் பெயரையும் இனிஷியலாக போடலாம் என்ற நடைமுறையை கொண்டுவந்தார். கிராமப்புறங்களில் கறவை மாடுகளை வழங்கி கிராமப் பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தினார். அதன் வழியே இன்றைக்கு எடப்பாடியாரும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.

ஆர்.பி.உதயகுமார்

குறிப்பாக மூன்று லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் கொண்டு வந்தார். உள்ளாட்சியில் 50 சதவிகித பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி, ஜெயலலிதாவின் திட்டத்தை செயல்படுத்தினார். தி.மு.க-வின் மகளிர் உரிமைத்தொகை என்பது ஏமாற்று திட்டம். அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்காமல் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. உரிமைத்தொகையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது. இத்திட்டத்துக்கு தனது தந்தை பெயரை சூட்டுவதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ள ஸ்டாலின், பெரியாரின் சுயமரியாதை சுடரை அணைத்து விட்டார். தமிழகத்தில் வீரமங்கை வேலு நாச்சியார், குயிலி, ராணிமங்கம்மாள், அன்னிபெசன்ட் அம்மையார் ஆகிய வீர மங்கையருக்கு எந்த கௌரவமும் வழங்க மனம் வரவில்லை. பெரியார் காத்திட்ட பெண் உரிமையை ஸ்டாலின் குழி தோண்டி புதைத்து விட்டார். இன்றைக்கு பெண் உரிமையை நிலைநாட்டி வாழும் பெரியாராக எடப்பாடியார் உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.