விஸ்வகர்மா திட்டத்தால் தமிழகம் அதிக பயன்பெற முடியும்: மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல்

மதுரை: விஸ்கர்மா திட்டதால் தமிழ்நாட்டிற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் தெரிவித்துள்ளார்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் சார்பில் ‘விஸ்வகர்மா ‘ திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இதற்கான நிகழ்ச்சி மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியிலுள்ள வேளாண் வணிக வளாகத்தில் நடந்தது. மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் எஸ்பிசிங். பாகேல் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் காந்தி, சிறு,குறு (எம்எஸ்எம்இ) சேர்மன் முத்துராமன், பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மதுரை நகர் தலைவர் மகா சுசீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் பேசும்போது, ”தமிழ்நாடு கலையும், கலாச்சாரமும் நிறைந்த மண். தமிழ்நாடு திருவள்ளுவர், ஓளவையார் போன்ற சிறப்பு மிக்கவர்கள் வாழ்ந்த பூமி. பாரம்பரியமிக்க கலைகளின் பிறப்பிடம் தமிழ்நாடு. தஞ்சாவூர் ஓவியங்களும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் உலகளவில் பிரசித்தி பெற்றவை. கலாச்சார கைவினை கலைஞர்களின் தொழில்களை திறமைகளை பாதுகாக்கவே விஸ்வகர்மா திட்டம் ரூ.13,000 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. கலைஞர்கள், தொழிலாளர்கள் இலவசமாக பதிவு செய்து அடையாள அட்டைகளை பெறலாம். இந்திய பொருளாதாரத்தை உலகளவில் உயர்த்துவதே பிரதமரின் கனவு. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தொழில் துறையினர் சார்பில் மத்திய அமைச்சருக்கு கைவினைப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், ”விஸ்வகர்மா திட்டத்தால் தமிழகத்திற்கும், மதுரைக்கும் நிறைய வாய்ப்பு உள்ளது. மதுரை எய்ம்ஸ் அமையவிருக்கும் இடத்தை நேரில் பார்வையிடுவேன். மதுரையை தொடர்ந்து மக்கள் தொகை அடிப்படையில் தூரத்தைப் பொறுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும். மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தை தமிழகத்தில் முறையாக செயல்படுத்தாமல் உள்ளனர். நிபா வைரஸ் குறித்து தீவிர கண்காணிப்பு செய்கிறோம். முகலாயர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தே சனாதானத்தின் மீதான தாக்குதல் தொடர்கிறது. இருந்தாலும் சனாதன தர்மம் நிலையானது. எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இண்டியா கூட்டணிக்கு தலைவரும் கிடையாது, கொள்கையும் கிடையாது. 1977, 96 இதே போன்றுதான் எதிர்கட்சியினர் கூட்டணி அமைத்துள்ளனர். அவர்களால் வெற்றி பெற முடியாது” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.