சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை வாதங்களை ஏற்று, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது தொடர்பான பிரச்சினையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில், “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது?’ என விசாரணையின்போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டுள்ளது. ஒருவர் மீது வழக்குப் பதிவு செயப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என்பதை விசாரணை அமைப்புதான் நிரூபிக்க வேண்டும். வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத் துறையிடம் உள்ள நிலையில் மனுதாரரால் சாட்சிகளை கலைக்க முடியாது.
இலாகா இல்லாத அமைச்சராக அவர் இருக்கும் நிலையில், எங்கும் தப்பி செல்லவும் இயலாது. செந்தில் பாலாஜிக்கு தற்போது இருக்கும் உடல்நிலை படி 30 நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்க முடியாது. எங்கும் தப்பித்து ஓடாமல் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர்கொள்வார். 30,000 கோடி, 20,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் கணினியில் வைக்கப்பட்டுள்ளதால், ஆவணங்களை கலைக்க முடியாது” என்று வாதிடப்பட்டிருந்தது.
நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது என செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டது என்ற வாதத்துக்கு அமலாக்கத் துறை சார்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், “குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தான் தன் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி தாம் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். வேலை வேண்டும் எனக் கோரி பணம் கொடுப்பவர்கள் வங்கி மூலம் பணம் கொடுக்கமாட்டார்கள். அமலாக்கத் துறை விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோர முடியாது.
இந்திய தண்டனை சட்ட வழக்குகளுக்கு வேண்டுமானால் அது பொருந்தும். அமலாக்கத் துறை சட்டம் என்பது வேறு. அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். சமூகத்தில் சக்தி வாய்ந்த நபராக உள்ளார். எனவே சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் கோருவதற்கு உடல்நிலை ஒரு காரணம் அல்ல.
அமலாகக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களும் உள்ளனர். செந்தில் பாலாஜியின் எலக்ட்ரானிக் பொருட்களை அமலாக்கத் துறை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக கூறுவது தவறு. ஆவணங்களை சேகரிக்கும் நோக்கத்தில்தான் எலக்ட்ரானிக் பொருட்களை அமலாக்கத் துறை கைப்பற்றியது. எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டிருந்தது. வாதங்கள் நிறைவடைந்து இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, அமலாக்கத் துறை வாதங்களை ஏற்று, ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.