`கலைஞர் கருணாநிதி’ இந்தப் பெயரைச் சுற்றியே தமிழ்நாட்டின் அறுபது ஆண்டுக்கால அரசியல், மையம்கொண்டிருந்தது. ஒரு சின்னஞ் சிறிய கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர், தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானிப்பவராகவும், இந்திய அரசியலில் முக்கியமானவராகவும் திகழ்ந்தார் என்பது சாதாரணமாக நிகழ்ந்துவிடக்கூடியது அல்ல; அது சரித்திரம். அதைப் படைத்தவர் கலைஞர் கருணாநிதி. திரைத்துறையில் வசனகர்த்தா, பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் எனவும் அரசியலில் பேச்சாளர், களச்செயற்பாட்டாளர், கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் எனவும்… பத்திரிகை, இலக்கியம் என, தான் தொட்ட துறைகளிலெல்லாம் துலங்கியவர், அவற்றில் தனித்து விளங்கியவர் கலைஞர் கருணாநிதி.

தேர்தல் அரசியலில் வென்றாலும் தோற்றாலும் ஒரே நிலையில் இருந்து, தமிழக அரசியல் லகானைத் தன் கையில் வைத்திருந்து செயலாற்றியவர் அவர். தான் ஒரு பத்திரிகையாளர் என்பதால், பத்திரிகைகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நண்பனாகத் திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. அவரின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், விகடனுடன் அவருக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும்விதமாக, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான கலைஞர் கருணாநிதி தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி சரமாக `கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ என்ற பெயரில் நூலாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூலின் வெளியீட்டு விழா, தற்போது சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிக விமர்சையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விகடன் பிரசுரத்தின் இந்த நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, உலக நாயகன் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து பேசிய பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் இருந்து இதைப் பார்க்கவில்லையே என்கிற கவலைதான் என்னை இப்போது ஆட்கொண்டிருக்கிறது. அவர் மகனாக நான் பார்த்து அவர் சார்பில் மகிழ்ந்துகொண்டிருக்கிறேன். பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியலாளுமை எனப் பன்முக ஆற்றலைக் கொண்டவர் கலைஞர்.

அவரை ஊடகத்துறை பாராட்டுவது பொருத்தமான ஒன்று. அதை விகடன் கச்சிதமாகc செய்துகொண்டிருக்கிறது. விகடன் 100-வது ஆண்டை நெருங்குகிறது. அதற்கு இப்போதே வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். `கொள்கையிலே வேறுபாடு இருந்தாலும், சொல்கையிலே பண்பாடு வேண்டும் அதைச் செய்கையிலே காட்டியவன் விகடன்தானே’ என்று கலைஞர் கவிதையாலேயே பாராட்டியிருக்கிறார்” என்றார்.
`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூலை வாங்குவதற்கு, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்—–>>> https://bit.ly/3Zpcc0r