மதுரை: சிவகிரி பெரியபிராட்டி அம்மன் கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி இந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாய தலைவர் சின்னசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிவகிரி பேரூராட்சியில் பெரியார் கடை பஜார் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பெரியபிராட்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோயிலின் அருகே உள்ள காலியிடத்தில் தான் திருவிழா நடைபெறும். அந்த இடத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். அந்த காலியிடத்தை சிலர் கட்டிடம் கட்டி வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரத்தில் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் சின்னசாமி இறந்த நிலையில் அவர் சார்பில் வாணி ஜெயராமன் உயர் நீதிமன்ற கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தென்காசி மாவட்ட ஆட்சியர், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர், சிவகிரி வட்டாட்சியர் ஆகியோர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. அவர்கள் நேரில் ஆஜராகி ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக ஒருதரப்பினர் சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தியதால் தொய்வு ஏற்பட்டுள்ளது என விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவில், “பிரச்சினைக்குரிய இடத்தை இரு சமூகத்தினர் உரிமை கோரி வருகின்றனர். அந்த கோயில் தனியார் கோயிலா, பொதுக்கோயிலா என அறிவிக்க அறநிலையத் துறை அதிகாரிகளிடம் இரு தரப்பினரும் மனு அளிக்க வேண்டும். அறநிலையத் துறை இணை/ துணை ஆணையர் கோயிலை நேரடி கட்டுப்பாட்டிலும், நிர்வாகி நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கலாம்.
இரு பிரிவினர் இடையே பிரச்சினை இருப்பதால் கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். இரு தரப்பினரின் மனுக்கள் மீது இறுதி முடிவெடுக்கும் வரை யாரும் கோயிலில் உரிமை கோர முடியாது. மனுக்கள் மீது அனைவருக்கும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்கி 12 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.