வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி : ரயில் மறியல் போராட்டத்தை, ‘குர்மி’ அமைப்புகள் திரும்பப் பெற்றதை அடுத்து, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், வழக்கம்போல் ரயில்கள் இயங்கின. ஆனாலும், ஒரு சில இடங்களில் மறியல் போராட்டங்கள் நடந்தன
ஜார்க்கண்டில், ‘டோட்டெமிக் குர்மி விகாஸ் மோர்ச்சா’ உள்ளிட்ட குர்மி அமைப்புகள், தங்கள் சமூகத்துக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள ஒன்பது ரயில் நிலையங்களில் மறியல் போராட்டம் நடக்கும் என, குர்மி அமைப்புகள் அறிவித்திருந்தன.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக, இந்த மாநிலங்களில், 11 ரயில்கள் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில், ரயில் மறியல் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக, குர்மி அமைப்புகள் நேற்று அறிவித்தன. தங்கள் அமைப்பின் தலைவர்களுக்கு போலீசார் நெருக்கடி கொடுப்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், வழக்கம்போல் ரயில்கள் இயங்கியதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.எனினும், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களில் உள்ள ஒரு சில ரயில் நிலையங்களில், குர்மி அமைப்புகளைச் சேர்ந்தோர் மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால், எந்தவித அசம்பாதவிதமும் நடக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement