Doctor Vikatan: 10 வயதுப் பெண் குழந்தைக்கு தினமும் 500 மில்லி பால் கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் மகள் அவளுடைய 10 வயதுப் பெண் குழந்தைக்கு தினமும் 3 வேளைகளும் பால் கொடுக்கிறாள். கிட்டத்தட்ட 500 மில்லி பால் கொடுக்கிறாள். என் பேத்தி லேசான உடல் பருமனுடன் காணப்படுகிறாள். அவ்வளவு பால் கொடுக்க வேண்டாம் என்றால் கேட்க மறுக்கிறாள். இந்த வயதில் இவ்வளவு பால் கொடுப்பது சரியானதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

உங்களுடைய 10 வயதுப் பேத்திக்கு ஒரு நாளைக்கு 400 மில்லி பாலும், சிறிதளவு தயிர், பனீர் போன்ற பால் பொருள்களும் கொடுக்கலாம். அதற்கு மேல் கொடுப்பது அவசியமற்றது.

உங்கள் பேத்திக்கு உடல்பருமன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதால் கீழ்க்காணும் விஷயங்களை அவளது உணவுப்பழக்கத்தில் அவசியம் பின்பற்றும்படி உங்கள் மகளுக்கு அறிவுறுத்துங்கள். அதாவது தினமும் அவளுக்கு காய்கறி சாலட் கொடுத்துப் பழக்குங்கள். வெஜிடபுள் சூப் மற்றும் மோர் குடிப்பதையும் பழக்கப்படுத்துங்கள். உமியுடன் உள்ள பருப்பு வகைகளைக் கொடுத்துப் பழக்குங்கள்.

இந்த வயதிலிருந்தே நிறைய காய்கறிகள் சாப்பிடும் வழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கீரை கொடுங்கள். பழங்களாகக் கொடுங்கள். பழச்சாறு கொடுப்பதைத் தவிருங்கள்.

பாக்கெட் உணவுகள், பாட்டில் குளிர் பானங்கள், சாக்லேட், கேக், இனிப்புகள் போன்றவற்றை அறவே தவிர்த்துவிடுங்கள். உணவில் சர்க்கரையின் அளவை முடிந்தவரை குறைத்துவிடுங்கள்.

பால்

இந்த வயதில் உடல் பருமன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதால் அது மேலும் அதிகரிக்காமலிருப்பதற்கான முயற்சிகளை இப்போதே தொடங்குங்கள். உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துங்கள். டான்ஸ், ஸ்விம்மிங் என அவளுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு விஷயத்தில் ஈடுபடுத்துங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.