Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் டெங்கு காய்ச்சல் பரவுவதாகக் கேள்விப்படுகிறோம். எனக்கும் நான்கைந்து நாள்களாக காய்ச்சல், உடல்வலி இருந்ததால் மருத்துவரைச் சந்தித்தேன். அவரும் அறிகுறிகளைக் கேட்டுவிட்டு, வைரஸ் காய்ச்சல் போலத் தெரிகிறது என மருந்துகள் எழுதிக்கொடுத்தார். அதில் ஆன்டிபயாடிக்கும் இருக்கிறது. வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் எதற்கு? இதை எப்படிப் புரிந்துகொள்வது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

பொதுவாக வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யாது. சில ஆன்டிபயாடிக்குகள் சில வகை வைரஸ் காய்ச்சலுக்கு மிகக் குறைந்த அளவில் பலன் தந்தாலும், பெரும்பான்மையான வைரஸ் தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவையில்லை. அந்த வகையில் வைரஸ் காய்ச்சலைப் பொறுத்தவரை அறிகுறிகளை வைத்து, அவற்றுக்கான சிகிச்சைகளே பரிந்துரைக்கப்படும்.
டெங்கு என்பதும் வைரஸ் காய்ச்சல்தான். ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல இந்தக் காய்ச்சலிலும் அறிகுறிகளுக்கேற்ற சப்போர்ட்டிவ் சிகிச்சைகளே பரிந்துரைக்கப்படும். உதாரணத்துக்கு… காய்ச்சல் இருந்தால் அதற்கான மாத்திரை, மூக்கில் நீர் வடிதல் இருந்தால் அதற்கான மருந்து என அறிகுறிகளுக்கேற்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
எனவே டெங்கு பாதித்தவர்களில் 96 சதவிகிதம் பேருக்கு பெரிய பாதிப்புகள் இல்லாமல் சின்னச் சின்ன அறிகுறிகளுடன் சரியாகிவிடும். மீதமுள்ள நான்கைந்து சதவிகித நோயாளிகளுக்குத்தான் டெங்கு தீவிரமான பாதிப்புகளைத் தருகிறது.
அதாவது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவது போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் டெங்கு காய்ச்சலை, மற்ற வைரஸ் காய்ச்சல்களைப் போல சாதாரணமானதாக நினைத்து அலட்சியம் செய்யாமல், தீவிரமாகக் கண்காணிக்க வலியுறுத்துகிறோம்.

பிறகு ஏன் டெங்கு காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கிறார்கள் என்ற உங்கள் கேள்வி நியாயமானதுதான். அதற்கொரு காரணம் இருக்கிறது. டெங்கு போன்ற சிலவகை வைரஸ் காய்ச்சல்கள் பாதிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ‘செகண்டரி பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் ‘ (Secondary bacterial infection) வரலாம்.
அதாவது வைரஸ் தொற்றின் விளைவாக சிலவகை பாக்டீரியா தொற்றும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். மற்றபடி டெங்குவுக்கோ, மற்ற வைரஸ் காய்ச்சலுக்கோ ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவையில்லை. உங்கள் அறிகுறிகளை வைத்து உங்கள் மருத்துவர் செகண்டரி பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் குறித்து சந்தேகப்பட்டு ஆன்டிபயாடிக் பரிந்துரைத்திருக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.