மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நவராத்திரி விழாவுக்கான உற்சாகத்தை அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு

வாரணாசி,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது;

“மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நவராத்திரிக்கான உற்சாகத்தை அதிகரித்துள்ளது. பெண்களின் வளர்ச்சிக்கான புதிய பாதைகள் திறக்கப்படும். அதற்காக இந்திய பெண்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

பெண்களின் தலைமை என்பது உலகின் பிற பகுதிகளுக்கு ஒரு நவீன அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால் நாம் சிவபெருமானுக்கு முன்பாக பார்வதி தேவியையும் கங்கா தாயையும் வணங்குபவர்கள். ராணி லட்சுமி பாய் போன்ற போர்வீரர்களின் பிறப்பிடம் வாரணாசி. சுதந்திரத்தில் ராணி லட்சுமி பாய் முதல் சந்திரயான்-3-ல் பெண்களின் பங்கு வரை பெண்களின் தலைமை என்ன என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் நிரூபித்து வருகிறோம்.

இந்த (பெண்கள் இடஒதுக்கீடு மசோதா) சட்டம் 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது, ஆனால் இப்போது அது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் பாக்கியம் உங்கள் வாரணாசி எம்.பி.யான எனக்கு கிடைத்துள்ளது.” இவ்வாறு அவர் பேசினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.