மக்களவையில் நேற்று முன்தினம் சந்திரயான் 3-ன் வெற்றி குறித்த விவாதத்தின்போது, பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சக எம்.பி டேனிஷ் அலியை தீவிரவாதி எனக் கூறியது பெரும் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க எம்.பி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் வேளையில், மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, பா.ஜ.க எம்.பி-யை `இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது’ என வெறும் வாய் வார்த்தையாகக் கண்டித்தது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, “சபாநாயகர் கண்டித்து அனுப்பியது பிரம்மிப்பாக இருக்கிறது. இதைவிட சிறிய விஷயத்துக்கெல்லாம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போன்றோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மிகவும் வெட்கக்கேடு” என்று விமர்சித்திருந்தார்.

மேலும், காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நாடாளுமன்ற வரலாற்றில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதில்லை. இதனை அவை குறிப்பிலிருந்து நீக்குவது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதனை ஆராய்ந்து, பா.ஜ.க எம்.பி மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுப்பது மட்டுமே சரியானதாக இருக்கும்” என்று ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதில் நடவடிக்கை எடுக்குமாறு, டேனிஷ் அலியும் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையில் டேனிஷ் அலி, “சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று நான் நம்புகிறேன். ஆனால், அது நடக்கவில்லையென்றால், கனத்த மனதுடன் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுவது பற்றி நான் பரிசீலிப்பேன்” என்று ஊடகத்திடம் கூறியிருந்தார்.

இத்தகைய சூழலில்தான், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று டேனிஷ் அலியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து டேனிஷ் அலி, “எனது மன உறுதியை உயர்த்தவும், ஆதரவை வழங்கவும் அவர் இங்கு வந்திருக்கிறார். நான் தனியாக இல்லை, ஜனநாயகத்துடன் நிற்கும் அனைவரும் என்னுடன் நிற்கிறார்கள் என்று அவர் என்னிடம் கூறினார்” என்று தெரிவித்தார்.

மேலும், டேனிஷ் அலி தனது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு கலாசாரத்துக்கு எதிரான எனது போராட்டத்தைத் தொடர உங்கள் திடீர் வருகை எனக்கு பெரும் பலத்தை அளித்தது. வெறுப்பு தோற்கும், அன்பு வெல்லும்” என்று பதிவிட்டிருந்தார். ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் டேனிஷ் அலியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “வெறுப்பின் சந்தையில் அன்பின் கடை” என்று பதிவிட்டிருந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி, எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.