அரூர்: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள மினி விளையாட்டு அரங்கை சீரமைத்து மேம்படுத்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மினி விளையாட்டு அரங்கம் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.39 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் திறக்கப்பட்டது. அப்போதைய துணை முதல்வரும், இன்றைய முதல்வரு மான மு.க.ஸ்டாலின் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.
கிராமப்புற விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இந்த மினி விளையாட்டு அரங்கமானது பார்வையாளர் மாடத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை மற்றும் மாலையில் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர்.
ஆனால், விளையாட்டு மைதானத்தை பராமரிக்காததால் சுற்றுப் பகுதிகளில் புதர் மண்டியும், விஷ பூச்சிகள் நடமாடும் பகுதியாகவும் மாறி வருகிறது. தருமபுரி நகருக்கு அடுத்த பெரிய நகரமாக வளர்ந்து வரும் அரூர் பகுதியில் இருந்து மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவில் வீரா்கள் உருவாகி வரும் நிலையில், அவர்களுக்கான பயிற்சி மையங்கள், பயிற்றுநர்கள், உபகரணங்கள் இல்லை.
எனவே, அரூரில் உள்ள மினி விளையாட்டு மைதானத்தை அவர்களுக்கான பயிற்சி பெறும் மையமாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், மைதானத்தை புதுப்பித்து கழிப்பறை, வீரர்கள், வீராங்கனைகள் உடைமாற்றும் அறை, ஓய்வெடுக்க இருக்கை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை அமைத்து தர வேண்டும் என இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியன் கூறியதாவது: அரூர் மினி விளையாட்டு அரங்கை சீரமைத்து பல்துறை உடற்பயிற்சி கூடம் ஏற்படுத்த வேண்டும். பராமரிப்பு இல்லாமல் உள்ள கூடைப்பந்து மைதானத்தை சீரமைக்க வேண்டும். பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கம், தடகள போட்டிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகிய வற்றை வழங்கி கிராமப்புற மாணவர்களுக்கு தனி பயிற்சியாளர்கள் நியமித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
மேலும், மாவட்ட அளவிலான போட்டிகளை அடிக்கடி இங்கு நடத்துவதன் மூலம் இப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு நுணுக்கங்களை மற்ற வீரர்களிடமிருந்து அறிந்து கொள்ளுவும் முடியும். அரூர் விளையாட்டு மைதானத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.