கோட்டயம் :போதைப் பொருள் வியாபாரியின் வீட்டில் சோதனைக்கு சென்ற போலீசாருக்கு, ‘காக்கி’களை மட்டும் தாக்கும் நாய்களால் பெரிய சோதனை ஏற்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரளாவின் கோட்டயம் மாவட்ட போலீசின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு, கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து, அவரது வீட்டுக்கு சோதனைக்குச் சென்றனர்.
நாய்களை பழக்கும் தொழிலில் ஈடுபடுவதாக கூறி, அந்த நபர் போதைப் பொருள்களை கடத்தி வந்து, விற்பனை செய்வது தெரியவந்தது. அவரது வீட்டுக்குள் போலீசார் நுழைந்தபோது, 13க்கும் மேற்பட்ட நாய்கள், போலீசாரை சுற்றி வளைத்தன.
கடுமையாக போராடிய போலீசார், அந்த நாய்களின் கடிகளில் இருந்து தப்பினர்.
பின்னர், அந்த நாய்களை ஒரு பகுதிக்குள் அடைத்து வைத்து, அந்த வீட்டில் சோதனை நடத்தினர். இதற்குள், அந்த போதைப் பொருள் வியாபாரி தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் நடத்திய சோதனையில் அந்த வீட்டில், 17 கிலோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., கார்த்திக் கூறியதாவது:
இந்த நபர், நாய்களை பழக்கும் தொழில் செய்து வந்தார். உள்ளூரில் உள்ள மக்கள், வெளியூருக்கு செல்லும்போது, தங்களுடைய நாய்களை இவரிடம் ஒப்படைத்துச் செல்வர். இதற்காக கட்டணம் வசூலித்து வந்துள்ளார்.
அவர் தனியாக சில நாய்களையும் வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்களுக்கு, காக்கி உடை அணிந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தும் பயிற்சி அளித்து வந்துள்ளார்.
சோதனைக்கு சென்ற போலீசார், நாய்களின் திடீர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு, அந்த நாய்கள் பிடிக்கப்பட்டு, ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டன. இதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டார்.
அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதாக என விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்