கடந்த செப்டம்பர் மாதம் அரசாங்க வைத்திய சாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சின் அறிவித்தலுக்கு இணங்க விசேட உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கான அனுமதி 27வீதத்தால் அதிகரித்துள்ளது. ஏனெனில், தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்லும் நடுத்தர வர்க்கத்தினர்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வருவதே இவ்வதிகரிப்பிற்கான காரணம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனால் வைத்தியசாலைகளில் வழங்கப்படும் சேவைகளை அவ்வாறே தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு மருந்துப் பொருட்கள் உட்பட சகல சேவைகளையும் 30 வீதத்தால் அதிகரிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் விபரித்தார்.
வைத்தியர்கள் மாத்திரமன்றி தற்போது சுகாதாரத் துறையில் தாதிகள், மருத்துவ இரசாயன ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள், மருந்தாளர்கள், மருந்து ஆய்வாளர்கள் உட்பட பல சுகாதார துறையினர் போதுமானளவு இல்லாமை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.
பயிற்சிகளை நிறைவு செய்த 2,937 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கும், சுகாதாரத் துறை சார்ந்த உப பாடநெறிக்காக 825, தாதிய உப மருத்துவ மற்றும் தொழில்நுட்ப சேவைகளில் 4,788 பயிற்சியாளர்களை உள்வாங்குவதற்கும்,ஏனைய சேவைகளுக்கு பொருத்தமான ஊழியர்களுக்கு 3,778 நியமனங்களை வழங்குவதற்கு அவசியமான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார்.