நியூஸ்கிளிக் பத்திரிகையாளர்கள் வீட்டில் சோதனைக்கு முன்பு 45 நாள் ரகசிய விசாரணை நடத்திய போலீஸ்

புதுடெல்லி: நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 45 நாட்கள் ரகசிய விசாரணை நடத்தியபிறகு, நியூஸ்கிளிக் அலுவலகம் மற்றும் பத்திரி கையாளர் வீடுகளில் டெல்லி சிறப்பு போலீஸார் சோதனை நடத்தி உள்ளனர்.

சீன அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு, அமெரிக்க கோடீஸ்வரர் நெவிலி ராய் சிங்கம் நிதியளித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதில் நியூஸ்கிளிக் நிறுவனமும் ஒன்று என ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து சீன நிறுவனங்களிடம் இருந்து நியூஸ்கிளிக் நிறுவனம் பணம் பெற்றதற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவுக்கு வழங்கியது. இதன் அடிப்படையில் நியூஸ்கிளிக் நிறுவனம் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி சிறப்புபோலீஸார் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

அதில், இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொழில்நுட்ப கண்காணிப்புடன் விசாரணை நடந்துள்ளது. நியூஸ்கிளிக் நிறுவனத்தின் வருவாய் விவரங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், முறையற்ற வகையில் பணம் வந்ததும், இங்கு பணியாற்றும் சிலரின் பயணங்கள் சந்தேகத்திற்குரிய வகையிலும் இருந்துள்ளது.

நியூஸ்கிளிக் வெப்சைட்டில் இடம்பெறும் செய்திகள் மற்றும் வீடியோக்களை ஆராய மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சீன நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு குறித்த விசாரணையில் இறங்கினர். ஆரம்ப கட்ட விசாரணை கடந்த வாரம் முடிந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டெல்லி சிறப்பு போலீஸார், காவல் ஆணையர் சஞ்சய் அரோராவிடம் ஆலோசித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் 3 பிரிவினர் டெல்லி லோதி காலனியில் உள்ள டெல்லி சிறப்பு போலீஸ் தலைமையகத்தில், நியூஸ்கிளிக் நிறுவன சோதனை குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடந்துள்ளது. சந்தேக நபர்கள் ஏ,பி,சி என 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டனர். ஏ பிரிவில் நியூஸ்கிளிக் நிறுவனர் மற்றும் ஆசிரியருமான பிரபிர் புர்கயஸ்தா மற்றும் மனிதவளப் பிரிவு தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் இன்னும் 4 சந்தேக நபர்கள் சேர்க்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பி பிரிவில் நியூஸ்கிளிக் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இடம்பெற்றிருந்தனர். நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு ஆலோசகர்களாக இருந்தவர்கள் சி பிரிவில் இடம் பெற்றிருந்தனர்.

450 போலீஸார் சோதனை சுமார் 450 போலீஸார் பல குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இவர்களுக்கு எங்கே, யார் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என்ற தகவல் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இப்படியாக சுமார் 45 நாட்களாக மேற்கொண்ட ரகசிய விசாரைணைக்குப் பின் நியூஸ்கிளிக் நிறுவனத்துடன் தொடர்புடைய 50 பேர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.