நடிகர் அனுபம் கெர்-க்கு கை கொடுத்து தூக்கிவிட்டு கம்பி எண்ண வைத்த போலீஸ்

கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்து விட்ட பாலிவுட் நடிகர் அனுபம் கெர். அவ்வப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் செலெக்ட்டிவான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் ரவிதேஜாவுடன் டைகர் நாகேஸ்வரராவ் படத்திலும் கன்னடத்தில் சிவராஜ்குமாரின் கோஸ்ட் படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் வரும் அக்டோபர் 19 மற்றும் 20ம் தேதிகளில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இதனை தொடர்ந்து இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பேட்டிகள் அளித்து வருகிறார் அனுபம் கெர். அதில் தனது வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான விஷயங்கள் குறித்தும் பேசி வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு வீடியோ கேசட்டுகள் நடைமுறையில் இருந்த சமயத்தில் தனக்கு வேண்டிய பலருக்கு அதை கொண்டு சென்று கொடுத்து வந்தாராம் அனுபம் கெர். அப்படி ஒரு முறை ஒருவருக்காக அந்த வீடியோ கேசட்டுகளை கொண்டு செல்லும்போது நேரமாகி விட்டதே என்பதால் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தை மேம்பாலம் வழியாக கடக்காமல் குறுக்கு வழியில் கடந்துள்ளார். அப்போது எதிர் பிளாட்பார்மில் இருந்த ஒருவர் இவருக்கு கை கொடுத்து மேலே தூக்கி விட்டு உதவி செய்துள்ளார்.

ஆனால் பிளாட்பார்ம் மேலே ஏறிய பின்னரும் தனது கையை விடாமல் இன்னும் இறுகப்பற்றி கொண்டாராம் அந்த நபர். பின்னர் தான் தெரியவந்தது அவர் ஒரு ரயில்வே போலீஸ் அதிகாரி என்பது. இப்படி விதியை மீறி பாதையை கடப்பவர்களை பிடிப்பதற்காகவே அங்கே மப்டியில் நிற்பாராம் அந்த அதிகாரி. அப்படி கடந்ததற்கு தண்டனையாக தன்னை அன்றைய இரவு முழுவதும் லாக்கப்பில் வைத்து விட்டு மறுநாள் காலையில் தான் அனுப்பியதாக கூறியுள்ளார் அனுபம் கெர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.