சென்னை: கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
“தமிழ் வரலாற்று ஆய்வாளரான ஒரிசா பாலு என்கிற சிவபாலசுப்பிரமணி அவர்கள் மறைந்த செய்தியால் வேதனையடைந்தேன். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழன்பர்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி உறையூரில் பிறந்தவர் ஒரிசா பாலு. பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்ததால் ஒரிசா பாலு என அழைக்கப்பட்டார். தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடற்பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர் இவர்தான்.
குமரிக்கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக அறியப்படுகிறது. இதனிடையே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதற்கான சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (அக். 6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் வரலாற்று ஆய்வாளரான திரு. ஒரிசா பாலு (எ) சிவபாலசுப்பிரமணி அவர்கள் மறைந்த செய்தியால் வேதனையடைந்தேன்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழன்பர்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/P32hk5APjh
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 6, 2023