“இந்தியா உடன் மோதல் வேண்டாம்” – கனடாவுக்கு இங்கிலாந்து ஆலோசனை

லண்டன்: இந்தியா உடனான மோதல் போக்கை தவிர்க்குமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியா மீது குற்றம்சாட்டிய விவகாரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு அளிக்க மறுத்துவிட்டன. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உள்ளார். இதையடுத்து, இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளின் நிலை தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கினார். அப்போது, ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் இறையாண்மையையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிக்க வேண்டும் என்றும், வியன்னா தீர்மானங்களை ஒவ்வொரு நாடும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் ரிஷி சுனக் கூறினார். தற்போதுள்ள நிலை தணியும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் ரிஷி சுனக், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கனடா பிரதமரை தொடர்பு கொள்வதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதி அளித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, “இந்தியா – கனடா இடையே பதற்றமான சூழல் உருவாவதை விரும்பவில்லை. எந்தவொரு பிரச்சினையையும் பெரிதாக்க இடம் தர மாட்டோம். இந்தியாவின் மதிப்பு, முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேண முயற்சி மேற்கொள்வோம்’’ என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்புலம் என்ன? – இந்தியாவில் இருந்து கனடாவில் குடியேறிய ஹர்தீப் சிங் நிஜார் என்பவர், ‘காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பின் தலைவராக இருந்து, இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரை தேடப்படும் தீவிரவாதியாக இந்திய அரசு கடந்த 2022-ல்அறிவித்தது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பலமுறை வலியுறுத்தியும், கனடா அரசு ஏற்கவில்லை. இந்த நிலையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் உள்ள குருத்வாரா வளாகத்தில் மர்ம நபர்களால் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இந்த விவகாரத்தால் இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிஜார் கொலையில் தொடர்பு இருப்பதாக கனடாவில் பணியாற்றிய இந்திய தூதரக அதிகாரி ஒருவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். இதற்கு பதிலடியாக, இந்தியாவில் பணியாற்றிய கனடா தூதரக மூத்த அதிகாரி அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில், இந்தியாவில் பணியாற்றும் 41 கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுமாறு அந்நாட்டு அரசிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது. அக்.10-ம் தேதிக்குள் அவர்கள் வெளியேற வேண்டும். அதன்பிறகு அவர்களது தூதரக பாதுகாப்பு உரிமை பறிக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இந்தியாவில் பணியாற்றும் கனடா தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தன என்பது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.