புதுச்சேரி: “போலி பத்திரங்கள் மூலம் ரூ.1,000 கோடி சொத்துகள் அபகரிப்பு” – பகீர் கிளப்பும் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, எதிர்கட்சிகளையும், எதிர்கட்சித் தலைவர்களையும் திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் இறங்கியுள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் இது தொடர்ந்து வருகிறது. அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்வதும், பொய் வழக்கு போடுவதும் தொடர்கிறது. தமிழகம், மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் போன்ற எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் கல்லூரிகள், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீடு, மேற்கு வங்கத்தில் அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு

பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலோ அல்லது பா.ஜ.கவினர் மீதோ ஊழல் குறித்து எந்த வழக்கும் பதிவு செய்வதில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சுமார் 5,000-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது அமலாக்கத்துறை. அவற்றில் ஆறு வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. இது எதிர்கட்சிகளின் மீதான பழிவாங்கும் நடவடிக்கை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார். அந்த கணக்கெடுப்பை நடத்தினால் முன்னேறிய பிரிவினருக்கு செல்லும் சலுகைகள் தடுக்கப்படும். அதேபோல புதுச்சேரியிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். சென்டாக்கில் தொடர்ந்து குளறுபடி நடக்கிறது.

என்.ஆர்.ஐ இட ஒதுக்கீட்டில் விதிமுறையை மாற்றி, இடங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு செயலாளர் ஒத்துக்கொள்ளாததால் இந்த முடிவை கைவிட்டுள்ளனர். பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர் ஒருவருக்கு, இரண்டாவது கட்ட கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ் சீட் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு சீட் ஒதுக்கவில்லை. அதனால் அவர் புகார் தெரிவித்துள்ளார். அதனால் கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் போலி பத்திரங்கள் தயாரிப்பது, நிலங்களை அபகரிப்பது, தனியார் சொத்துக்களை வேறு நபருக்கு பட்டா போடுவது, கோயில் நிலங்களை அபகரிப்பது, அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்வது என பத்திரப்பதிவுத் துறை தொடர் ஊழலில் ஈடுபட்டிருக்கிறது. காரைக்கால் சார் பதிவாளர் மீது வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ, அவரை கைது செய்திருக்கிறது. யார் யாருக்கு லஞ்சம் செல்கிறது என அவர் வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

நாராயணசாமி வெளியிட்ட வீடியோ ஆதாரம்

புதுச்சேரி காமாட்சியம்மன் கோயில் நில வழக்கில் சார் பதிவாளர், பத்திரப்பதிவுத் துறை செயலாளர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில், நிலத்தை மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பல போலி பத்திரங்கள் தயாரிக்கப்படுகிறது. ஏற்கெனவே பதிந்த பத்திரங்களை எடுத்துவிட்டு, அங்கு புதிதாக தயாரிக்கப்பட்ட 32 பத்திரங்களை வைத்து ரூ.1,000 கோடிக்கும் மேலான சொத்துக்கள் அபகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளும், ஊழியர்களும் துணையாக இருக்கின்றனர். உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் 29 போலி பத்திரங்களும், பாகூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 3 போலி பத்திரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதிவுத்துறைக்கு தொடர்பே இல்லாத நபர்கள் பதிவுத்துறை அலுவலகத்தில் நுழைந்து, அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பத்திரங்களை மாற்றியுள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு இப்படி போலி பத்திரங்களை மாற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதுகுறித்து உதவி ஆட்சியர் விசாரணை நடத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளின் பின்னணி இருக்கிறது. ஒரு பத்திரத்துக்கு ஒரு எண்தான் கொடுக்கப்படும். ஆனால் இரண்டு பத்திரங்களுக்கு ஒரே எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. வில்லியனூரில் போலி பத்திரங்களை பதிய மாட்டேன் என்று கூறிய சார் பதிவாளர் கார்த்திகேயனை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியிருக்கிறது. அதையடுத்து திருக்கனூர் சார் பதிவாளர் பாஸ்கர், வில்லியனூருக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு பத்திரம் பதியப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக பத்திரப்பதிவுத் துறை ஊழலுக்கு என்ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சிதான் காரணம். பொதுமக்களின் பத்திரங்களுக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்தான் நிலவுகிறது.

யாருடைய சொத்தை, யாருக்கு வேண்டுமானாலும் போலி பத்திரங்கள் மூலம் எழுதிக் கொடுக்கும் நிலை புதுச்சேரியில் இருக்கிறது. பத்திரப்பதிவுத் துறையில் இமாலய ஊழல் நடக்கிறது. நில அபகரிப்புக் கூட்டம் அரசியல்வாதிகளின் துணையோடு இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த போலி பத்திரப்பதிவுக்கு முதலமைச்சரும் உடந்தையாக இருக்கிறார். புதுச்சேரியில் உள்ள மக்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத அளவுக்கு, என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. போலி உயில்கள் மற்றும் பத்திரங்கள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். அதை வலியுறுத்தி ’இந்தியா’ கூட்டணி கட்சிகள் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும்” என்றவர், ஒரு வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட அந்த வீடியோவில்,  ஒருவர் தரையில் அமர்ந்து கொண்டு இன்டெக்ஸ் புத்தகத்தில், ஆவணங்களை மாற்றும் காட்சி பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.