ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வெளியான `ஜவான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றிகரமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. இந்நிலையில் தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அட்லீ, விஜய் குறித்தும், ஷாருக்கான் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர், “விஜய், ஷாருக் இவர்கள் இருவரில் யாரை உங்கள் அடுத்த படத்தின் கதாநாயகனாகத் தேர்ந்தெடுப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த அட்லீ நான் இருவரையும்தான் தேர்ந்தெடுப்பேன் என்றார்.

“இருவரையும் நடிக்க வைக்க உங்களிடம் போதுமான பட்ஜெட் இருக்கிறதா?” என்று தொகுப்பாளர் கேட்டதற்கு, “அடுத்த படத்தை 3000 கோடி பட்ஜெட்டில் எடுக்க இருக்கிறேன்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அட்லீ, “நான் இருவரையும் நடிக்க வைக்க விரும்புகிறேன். ஒருவர் என் மனைவியைப் போன்றவர். மற்றொருவர் என் தாயைப் போன்றவர். எப்படி இருவரையும் விட்டுக் கொடுக்க முடியும்?
இன்றைக்கு நான் இந்த இருக்கையில் உட்கார்ந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் தளபதி விஜய்தான். அவர் எனக்குத் தொடர்ந்து பேக்-டு-பேக் படங்களைக் கொடுத்தார். நிச்சயமாக, நானும் அவருக்கு ஹிட் கொடுத்திருக்கிறேன். என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்.

அதேபோல ஷாருக் சார், அவர் அழைத்தால் பல இயக்குநர்கள் அவரை வைத்து படம் எடுக்க ஓகே சொல்லி இருப்பார்கள். ஆனால் அவர் என்னை நம்பி தேர்ந்தெடுத்தார். அந்த நம்பிக்கைதான் என்னை மிகுந்த பொறுப்புடனும், அன்புடனும் ஜவானை இயக்க வைத்தது” என்றார் அட்லீ.