ICC World Cup 2023 AFG vs BAN: உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ஆசிய அணிகளான ஆப்கானிஸ்தானும், வங்கதேசமும் மோதின. ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி காலை 10. 30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹாசன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பந்துவீசிய வங்கதேசம் ஆப்கன் அணியை 156 ரன்களுக்கு சுருட்டியது. ஆப்கன் அணி வெறும் 37.2 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்த நிலையில், குர்பாஸ் 47 ரன்களை அதிகபட்சமாக அந்த அணிக்காக எடுத்திருந்தார். மெஹடி ஹாசன், ஹகிப் அல் ஹாசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பொறுப்பான பார்ட்னர்ஷிப்
இதையடுத்து, களமிறங்கிய வங்கதேசம் ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை தவறிவிட்டாலும், மெஹடி ஹாசன் – நஜ்முல் ஹோசைன் ஷாண்டோ ஆகியோரின் சிறந்த பார்ட்னர்ஷிப் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது எனலாம். இருப்பினும், இடையில் இரண்டு எளிதான கேட்ச்களை ஆப்கானிஸ்தான் வீரர்கள் தவறவிட்டது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது எனலாம்.
கடைசி கட்டத்தில் இரண்டு விக்கெட்டுகள் சரிந்தாலும், ஷாண்டே விக்கெட்டை இழக்காமல் வெற்றியை உறுதிசெய்தார். அதன்மூலம், 34.4 ஓவர்களில் இலக்கை அடைந்து தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. நஜ்முல் ஆட்டமிழக்காமல் 59 ரன்களையும், மெஹடி ஹாசன் 57 ரன்களையும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் அஸ்மத்துல்லா ஒமர்ஸாய், ஃபருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
பந்துவீச்சு மட்டும் போதாது
சுழலுக்கு பெரிதும் உதவிய இந்த மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி தனது பேட்டிங்கில் தொடக்க கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்ததும், பந்துவீச்சின் முக்கிய கட்டங்களில் இரண்டு கேட்ச்களை தவறவிட்டதும் ஆப்கானிஸ்தானின் வெற்றி வாய்ப்பை பறித்தது எனலாம். உலகத் தர சுழற்பந்துவீச்சு இருந்தாலும், 157 ரன்கள் இலக்கிற்குள் வங்கதேசத்தின் பேட்டிங்கை தடுப்பது சற்று கடினமான ஒன்றுதான்.
ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கில் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்துக்கொள்ள வேண்டும். வெறும் பந்துவீச்சை நம்பி மட்டும் 50 ஓவர் வடிவில் முழுமையான கிரிக்கெட்டை விளையாட இயலாது எனவும் அந்த அணிக்கு அறிவுரைகளும் குவிகின்றன. மறுபுறம், கட்டுப்கோப்பாக பந்துவீசி, நேர்த்தியாக பேட்டிங் செய்த வங்கதேச அணி முதிர்ச்சி பெற்ற அணியாகி உள்ளது. மெஹடி ஹாசனுக்கு பிளேயர் ஆப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது.
அடுத்தடுத்தப் போட்டிகள்
வங்கதேச அணி வரும் செவ்வாய் (அக். 10) அன்று நியூசிலாந்து அணியை இதே தரம்சாலா மைதானத்தில் சந்திக்கின்றனர். ஆப்கானிஸ்தான் அணிக்கு அடுத்த போட்டி இந்தியாவுடன் வரும் அக். 11ஆம் தேதி நடக்கிறது. இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.
டி காக், வான் டெர் டசன் சதம்
இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. மற்றொரு லீக் போட்டியில் இலங்கை – தென்னாப்பிரிக்கா அணி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதி வருகின்றன. அதில் தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தென்னாப்பிரிக்காவின் டி காக், வான் டெர் டசன் ஆகியோர் சதம் அடித்து மிரட்டினர்.
புள்ளிப்பட்டியல்
உலகக் கோப்பை தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் முறையே 8,9, 10ஆவது இடங்களில் உள்ளன. தற்போது விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் 6, 7ஆவது இடத்திலும், நாளை விளையாட உள்ள இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் 4, 5ஆவது இடத்தில் உள்ளன.