இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டத்தை காண சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்.!

சென்னை,

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம் நடைபெற உள்ளது.

இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருப்பதால் முழு திறமையை வெளிப்படுத்தும். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஆட்டத்தை பார்ப்பதற்காக காலையில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு ரசிகர்கள் திரண்டனர். காலை 10 மணியளவில் ரசிகர்கள் வர தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல ரசிகர், ரசிகைகள் எண்ணிக்கை அதிகமானது. பெரும் அளவில் சேப்பாக்கத்தில் ரசிகர்கள் திரண்டனர். மைதானத்துக்குள் நுழையும் அனைத்து வாயில்களிலும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

12 மணியளவில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் ஸ்டேடியத்துக்குள் சென்றனர். அவர்கள் எந்த வழியாக எந்த நுழைவு வாசலுக்கு செல்ல வேண்டும் என்பதை போலீசாரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஊழியர்களும் அறிவுறுத்தினார்கள். இதையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு கொடிகள் அமோகமாக விற்பனையாகின.

இதேபோல வீரர்களின் ஜெர்சி, தொப்பி உள்ளிட்ட பொருட்களும் விறுவிறுப்பாக விற்பனையாகின. மேலும் ரசிகர், ரசிகைகள் தங்களது முகத்திலும் வர்ணம் பூசிக் கொண்டனர். இதற்கான பணியில் அதற்கான ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

இதையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனம் செல்வதற்கான நுழைவு சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.