பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்தது. இந்நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் இன்று அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர் ஆகிய இடங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவருகிறது. குடகு மாவட்டத்தில் உள்ள தலக்காவிரி, மடிக்கேரி, விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை ஆகிய இடங்களில் பெய்த பலத்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதேபோல கபிலா ஆறு உற்பத்தியாகும் வயநாட்டிலும் (கேரளா) கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, மண்டியா மாவட்டம் ரங்கப்பட்ணாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 11 ஆயிரத்து 52 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் 7 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை 96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று, இந்த ஆண்டில் இரண்டா வது முறையாக 100 அடியை கடந்தது. கடந்த ஜூலை 25ம் தேதி கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்தது குறிப்பிடத்தக்கது.
மைசூரு மாவட்டத்தில், கடல்மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,276 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 349 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 1500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் இன்று கிருஷ்ணராஜசாகர் அணை முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.
அணை முற்றுகை
இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் வாட்டாள் நாகராஜ் கூறுகையில், ‘‘வியாழக்கிழமை காலை 7 மணிக்கு பெங்களூருவில் இருந்து கிருஷ்ணராஜ சாகர் அணையை நோக்கி வாகன பேரணி நடத்தப்படுகிறது. அங்கு விவசாய அமைப்பினருடன் இணைந்து அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரை நிறுத்தும் வரை எங்களது போராட்டம் தொடரும்”என்றார்.
கன்னட அமைப்பினரின் போராட்டத்தால் கிருஷ்ணராஜ சாகர் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.