மெக்சிகோ : மெக்சிகோவில் அகதிகளை ஏற்றிச் சென்ற பஸ், விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த, 16 பேர் பலியாகினர்.
தென் அமெரிக்க நாடான வெனிசூலா மற்றும் கரீபியன் நாடான ஹெய்தியைச் சேர்ந்த அகதிகள், 55 பேருடன், பஸ் ஒன்று நேற்று அமெரிக்கா சென்றது.
வட அமெரிக்க நாடான மெக்சிகோ வழியாக சென்ற அந்த பஸ்,ஒக்சாகா மாகாணம் தெபல்மீம் பகுதியில் விபத்தில் சிக்கியது.
அதிவேகமாக சென்ற பஸ், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில், பஸ்சில் பயணித்த இரு பெண்கள், மூன்று சிறுவர்கள் உட்பட, 16 பேர் பலியாகினர்; 29 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மெக்சிகோ வழியாக பல்வேறு நாட்டு அகதிகள் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்வது பல ஆண்டுகளாக தொடர்கிறது.
இந்நிலையில், அவர்களை ஏற்றிச் செல்லும் பஸ், கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும் தொடர்கதையாக உள்ளது.
அவ்வப்போது நடத்தப்படும் சோதனைகளை தவிர்க்க, கட்டுப்பாடற்ற முறையில் வாகனங்கள் இயக்கப்படுவதே விபத்துகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.
கடந்த வாரம் கரீபியன் நாடான கியூபாவில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற வாகனம் சியாபஸ் மாகாணத்தில் விபத்துக்குள்ளானதில், 10 பேர் பலியாகினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement