மோடி வீடு என்று சொல்லாதீர்கள்… அது முதலமைச்சர் வீடு – கனிமொழி கூறுவது என்ன?

Tamil Nadu Latest: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் (Thoothukudi Smart City Plans) 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் உள்பட 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு விழா, புதிய திட்டபணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (அக். 8) நடைபெற்றது. 

இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கனிமொழி சாடல்

இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி (Kanimozhi), “இங்கு இருக்கக்கூடிய எதுவும் மத்திய அரசுக்கு மட்டுமே சொந்தம் என்பது கிடையாது. எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் நீங்கள் முழுமையாக கொண்டு வருவது கிடையாது. அதில் மாநில அரசின் பங்கு மிகப் பெரிய அளவில் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கக்கூடிய வேலைக்கு பாதி நிதியை ஒன்றிய அரசு கொடுத்தால், மீதியை மாநில அரசுதான் கொடுக்கும். zeenews.india.com/tamil/videos/33-percent-reservation-for-women-is-onluy-eyewash-of-bjp-says-dmk-mp-kanimozhi-466974

இதில் எங்களுடைய உழைப்பு இருக்கிறது. எங்களுடைய நிதி இருக்கிறது. நீங்கள் கொடுக்கக்கூடிய 50 சதவீதம் கூட எங்களுடைய வரிப்பணம். ஜிஎஸ்டி என்று சொல்லி எல்லாவற்றையும் வாங்கிக் கொள்கின்றனர். திருப்பி எதுவும் கொடுப்பது கிடையாது.

பெயர் மட்டும் அவர்களுக்கா…

கிராமப்புறங்களில் வீடு கட்டக்கூடிய திட்டத்தில் மோடி வீடு என்று சொல்வார்கள். உண்மையிலேயே சொல்லக்கூடியது என்றால் அது முதலமைச்சர் வீடு என்று தான் சொல்ல வேண்டும். இந்தத் திட்டத்தில் அதிகமான பணம் கொடுக்கக்கூடியது தமிழக அரசு, இடம் கொடுக்கக்கூடியது தமிழக அரசு. ஒன்றிய அரசு  (Union Government) கொடுக்கக் கூடியது 72 ஆயிரம் ரூபாய்.  மீதி ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் கொடுப்பது தமிழக அரசு, நமது முதலமைச்சர் ஆவார். ஆனால் பெயர் மட்டும் அவர்கள் வைத்துக் கொள்வார்கள்.

குளத்தில் கூட தாமரை மலராது

ஊடகங்கள் மூலம் அரசியல் நடத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு பெயர் வைத்துக் கொள்வது, நாட்டினுடைய பெயரை மாற்றுவது போன்ற செயல்களை செய்து அரசியல் நடத்திவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் உண்மையை அறிந்தவர்கள், உண்மையை தெரிந்தவர்கள். நிச்சயமாக இங்கு எந்த மாற்றமும் வராது. இங்கு இருக்கும் எந்த குளத்திலும் தாமரை மலராது” என்றார்.

மேலும், இந்நிகழ்வில் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு,”இப்போது எதிர்க்கட்சிக்காரர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று சொல்கின்றனர். சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அன்றைய காலத்தில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி  கட்டியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. திறக்கும் போது ஜெயலலிதா திறந்தார். நாங்கள் கட்டியது நீங்கள் திறக்க கூடாது என்றா சொன்னோம்?.

ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம். கட்டியது கருணாநிதி. ஆனால் நீங்கள் போர்டு வைத்துள்ளீர்கள். உங்களுக்கு வந்தால் தக்காளி எங்களுக்கு வந்தால் ரத்தமா? அது எப்படி சரியாக வரும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாறி மாறி வரும்போது வருகிறவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது, செய்கிறார்கள். நீங்கள் 8 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முடிக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு காலத்தில் 80 சதவீதம் ஸ்மார்ட் சிட்டி பணிகளை முடித்து விட்டோம்.

கடந்தாண்டு ரூ. 23 ஆயிரம் கோடி, இந்தாண்டு ரூ. 24 ஆயிரம் கோடி தமிழக முதலமைச்சர் ஒதுக்கி தந்திருக்கிறார். மாநகராட்சி, நகராட்சியான பிரித்து ஒரே நேரத்தில் பணி நடக்கக்கூடிய மாநிலம் நமது மாநிலம் தான். கழிவு நீரோடை, மழை நீர் வடிகால் வாரியம், குடிநீர் மின்விளக்கு அனைத்தும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் பேரூராட்சிக்கு ரூ. 10 கோடி முதல்வர் கொடுக்கிறார் என கூறினால் காரணம் இருக்கிறது. மொத்தம் இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 60% நகராட்சிக்கு வந்து விட்டார்கள். எனவே வருகிறவர்களுக்கும் இருக்கிறவர்களுக்கும் குடிநீர் தர வேண்டும், எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டிய தேவை இருக்கிறது. 38 இடங்களில் பேருந்து நிலைய வேலை நடைபெறுகிறது. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்கெட் வேலைகள் நடந்து வருகிறது.  

தூத்துக்குடி மொத்த மாவட்டத்திற்கும் குடிநீர் வழங்கக்கூடிய திட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வேலையை விரைவில் செயல்படுத்தக்கூடிய வேலை நடைபெற்று வருகிறது. மாநகராட்சிக்கு நல்ல மேயர் கிடைத்துள்ளார். எனவே திட்டங்களை செயல்படுத்தி இப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் மீண்டும் மீண்டும் முதல்வர் ஆவார் என கூறிக்கொள்கிறேன்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.