சிவகாசி: விருதுநகர், தென்காசி மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு மற்றும் பயிற்சி பாசறை கூட்டம் ஞாயிறு அன்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். சிவகாசி எம்எல்ஏ அசோகன் வரவேற்றார்.
எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், பழனி நாடார், ராதாகிருஷ்ணன் மற்றும் விருதுநகர், தென்காசி மாவட்ட நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி முதலில் கோரிக்கை விடுத்து உள்ளது.
இந்தியா முழுவதிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இடஒதுக்கீடு முழுமையாக கிடைக்கும் என ராகுல் காந்தி கூறி உள்ளார். நம் நாட்டில் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் 60 சதவீதம் உள்ள நிலையில் அவர்களுக்கு 28 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீட்டில் சமநிலையை கொண்டு வர வேண்டும். மாநில வாரியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் சிக்கல் உள்ளதால் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் கோயில்களை அரசாங்கம் கைப்பற்றி இருப்பதால், கோயில்களின் சொத்து கொள்ளையடிக்கப்படுவதாக தவறான கருத்தை மோடி கூறியுள்ளார். ஒரு காலத்தில் கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரமாகவும், வலிமை உள்ளவர்களின் சொத்தாகவும், எளியவர்கள் உள்ளே நுழைய முடியாத சூழ்நிலை இருந்தது. ஆங்கிலேயர் காலத்திலேயே கோயில்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அதன்பின் காமராஜர் ஆட்சியில் இந்து அறநிலையத்துறை உருவாக்கி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரை அமைச்சர் ஆக்கி, கருவறைக்குள் சென்று வணங்க வைத்தார். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது வரவேற்க கூடியது. இண்டியா கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக மோடி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். பட்டாசு தொழிலுக்கு ஏற்றுமதி வசதியை ஏற்பத்த முதல்வரிடம் நேரில் வலியுறுத்துவோம். இண்டியா கூட்டணி அமைந்தால் பட்டாசு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் புதுமுகம், பழைய முகமும் கலந்து தான் இருக்கும். சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு உண்டு. விருதுநகர், கன்னியாகுமரி தொகுதி நாங்கள் சிறப்பாக செயல்பட்ட தொகுதி. அங்கு மீண்டும் போட்டியிட விரும்புகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.