அமெரிக்காவின் பென்சில்வெனியா மாகாணத்தின் ஆமன் சர்ச்சில் ஒரு உடல் வைக்கப்பட்டிருந்தது. அந்த உடல் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. அந்தச் சடலம் சுமார் 128 ஆண்டுகளாக, அங்கு பாதுகாக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த சர்ச்சின் இயக்குநர் பிளாங்கன்பில்லர், “இந்த உடலுக்கு சொந்தக்காரர் ஸ்டோன்மேன் வில்லி என அறியப்பட்டார். அவர் எங்கள் சர்ச்சின் சின்னமாகவும், வரலாறாகவும் கவனிக்கப்படுகிறார்.

பிக்பாக்கெட் செய்த குற்றத்துக்காக பென்சில்வேனியாவில் உள்ள சிறையில் இவர் அடைக்கப்பட்டிருக்கிறார். அப்போது தன்னுடைய உண்மையான பெயரைக் கூறாமல் போலியான பெயரைச் சொல்லி, பதிவுசெய்திருக்கிறார். அவரது பெயர் `ஜேம்ஸ் பென்’ எனப் பதிவுசெய்யப்பட்டது. இதற்கிடையில் அவர் சிறையில் சிறுநீரக செயலிழப்பால் மரணமடைந்தார். அவரது உடலை யாரும் வந்து வாங்கிச் செல்லவில்லை. அப்போது அவரது அடையாளங்களாக அவரது வயதும் (37), மீசையும் இருந்தது. அவரது பூர்வீகம் அயர்லாந்து, நியூயார்க் நகரங்களாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது.
அவரது உடலை உரியவர்கள் பெற்றுக்கொள்ளும் வரை, அதை எம்பாமிங் நுட்பங்களைப் பயன்படுத்தி மம்மியாக மாற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் அவரை அடையாளம் காணும் அளவுக்கு உடலை நீண்டகாலம் அப்படியே வைத்திருக்க இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. 1950-களில் தேதி குறிப்பிடாமல் அந்த உடலை இறுதிச்சடங்கு செய்வதற்கு அரசு முடிவுசெய்தது. அப்போது அந்த உடல் கருமையான சூட் மற்றும் போடியுடன் அதன் மார்பின் குறுக்கே சிவப்பு நிறப் பட்டையும் அணிவிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் முதல் உள்ளூர்வாசிகள், சுற்றுலாப் பயணிகள் வரை பல ஆண்டுகளாக இந்த உடலைப் பார்க்க பல பார்வையாளர்கள் வந்திருக்கின்றனர். இப்போது, ஏறக்குறைய 13 தசாப்தங்களுக்குப் பிறகு, ஃபாரெஸ்ட் ஹில்ஸ் மெமோரியல் பூங்காவில் உள்ள கல்லறையில் காவல்துறை பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.