சென்னை: சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித் துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி இன்று (அக்.8) நடைபெற உள்ளது. இப்போட்டியை முன்னிட்டு, சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே சிறப்புரயில் இயக்கப்படுகிறது. அதன்படி வேளச்சேரியில் இருந்து இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டையை இரவு 11.15 மணிக்கு அடையும்.
சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இரவு 11.20 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு வேளச்சேரியை நள்ளிரவு 12.05 மணிக்கு அடையும். இந்த போட்டிக்கு மட்டுமின்றி, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிகளின் போதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அக்.13, 18, 23, 27ஆகிய நாட்களிலும் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, மெட்ரோ ரயில் சேவை இன்று (அக்.8) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழக கிரிக்கெட் சங்கம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தப் படி கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் கிடையாது: மேலும், ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து எவ்வித கட்டணமும் இன்றி, மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி ரயில்கள் இயக்கப்படும்.
இதுபோல, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கி மலை மெட்ரோ ரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இன்று (அக்.8) இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பச்சை வழித் தடத்தில் ( சென்ட்ரல் – பரங்கிமலை வழித் தடம் ) இருந்து நீல வழித் தடம் மாறுவதற்கான ரயில் சேவை இயக்கப்படாது. உலக கோப்பை கிரிக்கெட் ரசிகர்கள், இதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிடுமாறு அறி வுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.