பெங்களூரு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையிலான போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் இதுவரை இந்தியர்கள் யாரும் இதில் காயமடையவில்லை என பெங்களூருவில் இயங்கி வரும் தென்னிந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டின் துணைத் தூதரக அலுவலக ஜெனரல் டமி பென்-ஹைம் (Tammy Ben-Haim) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் வேலை நிமித்தமாகவும், கல்வி, தொழில், சுற்றுலா போன்ற காரணங்களால் வருகை தந்துள்ள இந்தியர்கள் யாரும் காயமடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
“தற்போது இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் யாரும் ஹமாஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் காயமோ அல்லது உடல் ரீதியாகவோ பாதிக்கப்படவில்லை என்பதை இந்தியாவில் உள்ள மக்களுக்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம். இஸ்ரேலில் இருந்து இந்தியாவின் டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பையில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரக அலுவலகத்துக்கு அங்கு நிலவும் சூழல் குறித்து தொடர்ந்து வெளியுறவு அமைச்சகம் மற்றும் அதிகாரிகள் தரப்பில் தகவல் பெற்று வருகிறோம்.
தீவிரவாதத்துக்கு எதிராக நாம் ஓரணியில் நின்று போராட வேண்டும். இந்த நேரத்தில் இந்தியாவிடமிருந்து எங்களுக்கு கிடைக்கும் ஆதரவு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதி குறி வைக்கப்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்தது. இரு தரப்பிலும் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.