ஜெருசலேம், ‘திடீர் தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடரும். காசா பகுதி முழுதுமாக முற்றுகையிடப்படும். மின்சாரம், உணவு, எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும்’ என, இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மிக நீண்ட காலமாக மோதல் உள்ளது.
இந்நிலையில், பாலஸ்தீனர்களிடம் இருந்த காசா மலைக்குன்று அடங்கிய பகுதியை, 2007ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 6ம் தேதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டனர். மேலும், காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது, 20 நிமிடங்களில், 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்செலுத்தி தாக்குதல்நடத்தினர்.
அதிர்ச்சி
இது, இஸ்ரேல் ராணுவத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் உள்ளிட்ட பகுதிகளில், இஸ்ரேல் ராணுவம் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு மேலாக இந்த மோதல்கள் நடந்து வருகின்றன. நேற்றும் இது தொடர்ந்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல்களில், 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மூர்க்கத்தனமாக இரு தரப்பும் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. ‘ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் துவங்கிவிட்டது. மிகப் பெரும் விலையை அவர்கள் கொடுக்க நேரிடும்’ என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் தொடுக்க, இஸ்ரேல் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் தென்பகுதியை, ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுள்ளதாகவும், அனைத்து எல்லை பகுதிகளும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
‘ஆங்காங்கே ஒருசில ஹமாஸ் பயங்கரவாதிகள் இருக்கலாம்; அவர்களும் ஒழிக்கப்படுவர்’ என, இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் நேற்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோவ் கேலண்ட் நேற்று பல்வேறு பகுதிகளுக்கு சென்று ராணுவத்தினரின் நடவடிக்கைகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் போர் துவங்கிவிட்டது. அது முடியும் வரையில், இந்த தாக்குதல்கள் நடக்கும். காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.
காசாவை முழுமையாக முற்றுகையிட உள்ளோம். அந்த பகுதிக்கான மின்சாரம், உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் வினியோகம் முழுமையாக நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதிப்பு
காசா பகுதியில், 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல், இஸ்ரேல் அடிக்கடி நடத்தும் தாக்குதல்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சாரம், உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றுக்கு இஸ்ரேலையே காசா பகுதி நம்பியுள்ளது. இவை நிறுத்தப்பட்டால், மிகப்பெரும் பாதிப்பை காசா சந்திக்க நேரிடும்.
இதற்கிடையே, இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள், பெண்கள், குழந்தைகள், முதியோர் உட்பட, 100க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாகபிடித்துச் சென்றுள்ளனர்.
இதில் ராணுவ வீரர்களும் அடங்குவர். இவர்களை மீட்பதற்கான முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
10 நேபாள மாணவர்கள் பலி
இஸ்ரேலில் நேபாளத்தைச் சேர்ந்த, 4,500க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இதைத் தவிர, 265 நேபாள மாணவர்கள் அங்கு படித்து வருகின்றனர்.காசா பகுதியை ஒட்டியுள்ள இஸ்ரேல் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில், நேபாளத்தைச் சேர்ந்த, 17 விவசாய மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 10 பேர் உயிரிழந்துஉள்ளனர்.நான்கு பேர் காயமடைந்த நிலையில், இரண்டு பேர் தப்பியுள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
கேரள செவிலியர் படுகாயம்
இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள பையாவூர் பகுதியைச் சேர்ந்த ஷீஜா ஆனந்த், 41, என்ற பெண் காயமடைந்தார்.இவர், இஸ்ரேலில் உள்ள கடலோர நகரமான அஷ்கெலோனில், கடந்த ஏழு ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 7ல், கணவர் ஆனந்துடன் மொபைல் போனில் வீடியோ காலில் பேசிய ஷீஜா ஆனந்த், ‘பயங்கர சத்தத்துடன் ஏவுகணை தாக்குதல் நடக்கிறது’ என, கூறினார்.இதன் பின் அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து, ஷீஜா ஆனந்த் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட சக செவிலியர் ஒருவர், ‘தாக்குதலில் ஷீஜா ஆனந்த் காயமடைந்து, மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என தெரிவித்தார்.முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த இஸ்ரேலில் உள்ள நம் நாட்டின் துாதரக அதிகாரிகள், ஷீஜா ஆனந்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து தந்ததோடு, அவரதுகுடும்பத்தினரிடமும் தொடர்பில் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்