காசா: இஸ்ரேல் படை காசா மீது தாக்குதலை தொடர்ந்தால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை தூக்கிலிடுவோம் என ஹமாஸ் தீவிரவாத அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காசாவில் எந்தவித முன்னறிவிப்பின்றி மக்களின் வீட்டின் மீது குண்டுவீசித் தாக்கப்படும் நிகழ்வுக்கு இணையாக கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை தூக்கிலிடுவோம் என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை இஸ்லாமிய அறிவுரையின்படி பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
“காசா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த தாக்குதலை நிறுத்தும் நோக்கில் முன்னறிவிப்பின்றி எங்கள் மக்களின் வீடுகளை இஸ்ரேல் குறிவைத்தால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை நாங்கள் தூக்கிலிடுவோம்” என ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
சனிக்கிழமை அன்று ஹமாஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக இஸ்ரேல் தரப்பில் சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வெளித் தாக்குதல்களால் காசா பகுதியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்கள் சுமார் 687 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.