கொல்ல வேண்டாம், விட்டு விடுங்கள்…!! ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் கெஞ்சும் இளம்பெண்; அதிர்ச்சி வீடியோ

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் பயங்கரவாதிகள் அமைப்பை சேர்ந்த குழுவினர் அதிரடியாக ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, தாக்குதல்களை நடத்தி, அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இஸ்ரேலும், பதில் தாக்குதலுக்கு தயாரானது. படைகளை குவித்து பதிலடியும் கொடுத்தது. இதனால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 600 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பலரை கடத்தி, பணய கைதியாக வைத்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. அது உண்மை என நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நோவா அர்காமணி (வயது 25) என்ற இளம்பெண், அவருடைய காதலர் அவி நாதனுடன் இசை திருவிழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

அவர்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து, அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதன்பின்னர் நோவாவை அந்த கும்பல் பைக்கில் கடத்தி சென்றது. அவர்களிடம், தன்னை கொல்ல வேண்டாம் என்றும் விட்டு விடுங்கள் என்றும் கெஞ்சியுள்ளார். இந்த வீடியோவும் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதன்பின்னர், நோவாவின் காதலரை காணவில்லை.

இதுபற்றி வெளியான எக்ஸ் சமூக ஊடக பதிவொன்றில், நோவாவை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்தி, இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு இழுத்து சென்று விட்டனர். அவரை பணய கைதியாக பிடித்து வைத்துள்ளனர்.

அவர் உங்களுடைய மகள், சகோதரி, தோழியாக கூட இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இசை திருவிழாவில் இருந்து தப்பியோடிய நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் என நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.