சாத்தூர் பொருட்காட்சி அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பொருட்காட்சி நடத்துவதற்கான அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான தமிழக செய்தி, விளம்பரத் துறை ஊழியர்களின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பொருட்காட்சி நடத்த அனுமதி கேட்டு சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள செய்தி, விளம்பரத்துறை அலுவலகத்தில் மதுரை பழங்காநத்தம் தண்டல்காரன்பட்டியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் விண்ணப்பித்துள்ளார். இந்த அனுமதியை வழங்குவதற்கு அந்த துறையின் பொருட்காட்சி பிரிவு கணக்காளரான அன்பரசு என்பவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் மாணிக்கவாசகம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின்படி, செப்டம்பர் 19ம் தேதி அந்த தொகையை மாணிக்கவாசகம் கொடுத்தபோது, அதை பெற்ற கணக்காளர் அன்பரசன், அலுவலக உதவியாளர் பாலாஜி ஆகியோர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஜாமீன் கோரி அன்பரசன், பாலாஜி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி மணிமேகலை முன்பு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் உஷாராணி, தலைமை செயலகத்தில் உள்ள அரசு கணக்காளர் அன்பரசன் அலுவலகத்தில் சோதனை நடத்திய போது 90 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், ராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை ஆகிய பகுதிகளில் பொருட்காட்சி நடத்த லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளதால், விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், ஜாமீன் வழங்கக் கூடாது என வாதாடினார்.

இதையடுத்து, அரசு ஊழியர்களான அன்பரசன், பாலாஜி ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.