புதுடில்லி,சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விபரங்கள் அடங்கிய ஐந்தாவது பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தனிநபர்கள், பெருநிறுவனங்கள் கணக்கு துவங்கி பெரும் தொகையை முதலீடு செய்து வருகின்றன.
இதை கறுப்புப் பணமாக கருத முடியாது என, சுவிஸ் வங்கிகள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றன. அதே நேரத்தில், கறுப்பு பணம் பதுக்குவோரின் சொர்க்கமாக சுவிஸ் வங்கிகள் திகழ்வதாக பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தகவல் பரிமாற்ற ஒப்பந்தப்படி, சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பிற நாடுகளை சேர்ந்தவர்களின் விபரங்களை, சுவிஸ் அரசு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு அளித்து வந்தது.
இந்த பட்டியலில், 2018 வரை இந்தியா இடம் பெறவில்லை. கடந்த 2019 முதல், இந்தியா – சுவிஸ் இடையே தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்போது முதல் ஆண்டுதோறும் செப்., மாதத்தில், சுவிஸ் வங்கிக் கணக்கு விபரங்களை இந்தியாவுக்கு அந்நாடு அளித்து வருகிறது. இந்த பட்டியலில் தற்போது, 104 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வரிசையில், ஐந்தாவது பட்டியல் நம் அரசிடம் கடந்த மாதம் அளிக்கப்பட்டது.
மொத்தமுள்ள 104 நாடுகளில் இருந்து துவங்கப்பட்டுள்ள, 36 லட்சம் வங்கி கணக்குகளின் விபரங்கள் தற்போது அளிக்கப்பட்டுள்ளன.
அதில், சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளோர் பெயர், முகவரி, வசிக்கும் நாடு மற்றும் வரி அடையாள எண் உள்ளிட்ட விபரங்கள், கணக்கு மற்றும் நிதித் தகவல்கள், நிதி அறிக்கை தரும் நிதி நிறுவனம், கணக்கு இருப்பு மற்றும் மூலதன வருவாய் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சம்பந்தப்பட்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள், தங்கள் நாடுகளில் வரி ஏய்ப்பு அல்லது பிற பொருளாதார குற்றங்களில் ஈடுபடுதல், பணப்பரிமாற்ற மோசடி அல்லது பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க இந்த தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் உதவியாக உள்ளது.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களின் பெயர்களை அரசு பகிரங்கமாக வெளியிடவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்