பிரயாக்ராஜ் : “சிக்கலான சூழலை கருத்தில் வைத்து, எதிர்கால போர்களை சமாளிக்கும் வகையில் திறன்களை மேம்படுத்த வேண்டும்,” என, நம் விமானப் படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.
நம் நாட்டின் ராணுவ வலிமைக்கு முக்கிய பங்காற்றி வரும் விமானப் படை, 1932ம் ஆண்டு அக்., 8ல் முறைப்படி நிறுவப்பட்டது. நம் விமானப் படை வீரர்களின் அர்ப்பணிப்பு, துணிச்சல் போன்ற வற்றை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்., 8ல் இந்திய விமானப் படை தினம் கொண்டாடப்படுகிறது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நேற்று நடந்த, 91வது விமானப் படை தின விழாவில், இந்திய விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், கடந்த 72 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த விமானப் படையின் கொடி திரும்பப் பெறப்பட்டு, அதற்கு பதிலாக புதிய கொடியை தளபதி வி.ஆர்.சவுத்ரி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய விமானப் படையின் மதிப்புகளை சிறப்பாக பிரதிபலிக்கும் வகையில் புதிய கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
நம் விமானப் படையை புதிய உயரத்துக்கு எடுத்து செல்ல, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். நமது அர்ப்பணிப்பு மற்றும் கூட்டுத் திறனை பயன்படுத்தி எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவோம்.
தற்போதைய சிக்கலான சூழலில், அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். எதிர்கால போர்களை சமாளிக்கும் வகையில் நமது திறன்களை மேம்படுத்த வேண்டும். சவால்களை சந்திக்க எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே இருந்த நீலநிற பின்னணி உடைய கொடியில், விமானப் படையின் திறனை பிரதிபலிக்கும் வகையில் அதன் சின்னமும் புதிய கொடியில் சேர்க்கப்பட்டுள்ளது-.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement