புதுடில்லி : மத்திய பிரதேசத்தில் காங்., கட்சியின் முதல்வர் வேட்பாளராக, கமல்நாத் முன்னிறுத்தப்படுவார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
மொத்தம், 230 தொகுதி களை உடைய இம்மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் வர உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், முன்னணி அரசியல் கட்சிகள் மாநிலத்தில் பிரசார பணிகளை மேற்கொண்டுள்ளன.
தேர்தலில் போட்டியிடும், 79 வேட்பாளர்களை இதுவரை பா.ஜ., அறிவித்துள்ளது.
ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஒரு சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்துள்ளன.
இந்நிலையில், வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது.
அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
ம.பி.,யில் நிலவும் அரசியல் சூழலுக்கேற்ப வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
பா.ஜ., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஊழல்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த கூட்டம் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.
பொதுவாக, ஒரு மாநிலத்தில் கட்சியின் தலைவராக இருப்பவரே, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவர்.
ம.பி.,யில் மாநில தலைவராக கமல்நாத் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்