திரையில் ஆட்சி செய்த நடிப்பரசி, 'ஆச்சி' மனோரமா

பள்ளத்தூரிலிருந்து பயணப்பட்டு, ரசிக பெருமக்களின் உள்ளத்தூரில் நிரந்தர இடம் பிடித்து, வெள்ளித்திரையில் ஆட்சி செய்த 'நடிப்பரசி', 'ஆச்சி' என அழைக்கப்படும் நடிகை மனோரமாவின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று…

ஒரு நாடக நடிகையாக தனது கலையுலக வாழ்க்கையை ஆரம்பித்த இவர், தமிழ் திரையுலகில் கதாநாயகி, நகைச்சுவை, குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றி ஏறக்குறைய 1200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த தமிழ் திரையுலகின் பெருமைக்குரிய அடையாளமாக பார்க்கப்படுபவர் 'ஆச்சி' மனோரமா.

https://www.youtube.com/watch?v=efbL2g2nGJg

1958ல் ‛மாலையிட்ட மங்கை' மூலம் நகைச்சுவை நங்கையாக ஆரம்பித்த இவரது வெள்ளித்திரைப் பயணம், பொங்கிப் பெருகும் கங்கையாக அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆர்பரித்து ஓடியது.

அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டி ராமாராவ் என ஐந்து முதல்வர்களோடு கலையுலகில் தன் கலைப்பணியை பகிர்ந்து கொண்ட பெருமைக்குரியவராகவும் பார்க்கப்பட்டவர்தான் மனோரமா.

இந்தியத் திரையுலகிலேயே இப்படி ஒரு அசாத்திய திறமை கொண்ட நடிகையை வேறெங்கும் காண முடியாது என அடித்துச் சொல்லும் அளவிற்கு யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு தனித்தன்மை கொண்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்திய திரைக்கலைஞராகவே வலம் வந்தார்.

இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அனைத்திலும் நடித்தார் என்று சொல்வதைக் காட்டிலும் வாழ்ந்தார் என்று சொல்லுவதே சாலச் சிறந்ததாகும்.

“தில்லானா மோகனாம்பாள்” திரைப்படத்தில் சிக்கில் சண்முக சுந்தரமாக வரும் சிவாஜிக்கு நாதஸ்வரம் நன்றாக வாசிக்கத் தெரியும், மோகனாம்பாளாக வரும் பத்மினிக்கு நன்றாக ஆடத் தெரியும், இந்த இரண்டையும் செய்ததோடு மட்டுமின்றி, கள்ளபார்ட் வேடமெல்லாம் போட்டு பாடவும் செய்த மனோரமாவின் “ஜில் ஜில் ரமாமணி” கதாபாத்திரத்தை தமிழ் திரைப்பட ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க இயலுமா என்ன?

இயக்குநர் விசுவின் “சம்சாரம் அது மின்சாரம்” திரைப்படத்தில் “கம்முனு கெட” என்ற ஒற்றை வசனத்தின் மூலம், திரையில் தோன்றும் மற்ற கதாபாத்திரங்களை பார்வையாளர்களின் நினைவுகளிலிருந்தே லாவகமாக நீக்கிவிடும் மனோரமாவின் வேலைக்காரி 'கண்ணம்மா' கதாபாத்திரத்தைத்தான் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா?

நடிப்பில் 'நடிப்பரசி' என்றால் பாடலில் இவர் ஒரு 'ராட்சசி'. இவர் குரலினிமையில் வந்த பாடல்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இன்று வரை உண்டு.

“வா வாத்தியாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நா உடமாட்டேன், ஜாம் பஜார் ஜக்கு நீ சைதா பேட்ட கொக்கு”, “போடச் சொன்னா போட்டுக்கறேன்”, “பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே”, “தெரியாதோ நோக்கு தெரியாதோ”, “மஞ்ச கயிறு தாலி மஞ்ச கயிறு”, “டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே”, “மெட்ராஸ சுத்திப் பாக்கப் போறேன்” போன்ற ஏராளமான பாடல்களால் இசை வடிவில் நம்மை மகிழ்வித்தவர் மனோரமா.

தமிழகத்தின் அனைத்து தர பெண்களின் வாழ்க்கையை அப்படியே திரையில் காட்டிய ஒரு திரைமேதைதான் மனோரமா. 1980களில் தமிழ் திரையில் கதாநாயகர்களின் அம்மா என்றால் அது மனோரமா என்பதே எழுதப்படாத விதியாக இருந்தது எனலாம்.

“அண்ணாமலை”யில் ரஜினிக்கு அம்மாவாக, “அபூர்வ சகோதரர்கள்” திரைப்படத்தில் கமலுக்கு அம்மாவாக, “சின்னக்கவுண்டர்” திரைப்படத்தில் விஜயகாந்துக்கு அம்மாவாக, “சின்னத்தம்பி”யில் பிரபுக்கு அம்மாவாக, “கிழக்கு வாசல்” திரைப்படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக என அந்த காலகட்டங்களில் இவர் அம்மாவாகவே வாழ்ந்திருந்த படங்கள் ஏராளம்! ஏராளம்!!

“பத்மஸ்ரீ விருது”, “தேசிய விருது” உட்பட இவர் வாங்கி குவித்த விருதுகளும் இவரது படங்களின் எண்ணிக்கை போன்றே மிக நீண்டது. இத்தனை பெருமைக்கும், புகழுக்கும் உரிய 'ஆச்சி' மனோரமாவின் நினைவு நாளில் அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை பகிர்ந்தமைக்கு நாம் மனம் நிறைவு கொள்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.