புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானுல்லா கானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
டெல்லி ஓக்லா தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானுல்லா கான் (49). இவர் டெல்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராக உள்ளார். இவர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி டெல்லி வக்ஃபு வாரியத்தில் அரசு விதிகளுக்கு புறம்பாக 32 பேரை நியமனம் செய்ததாக புகார் எழுந்தது.
மேலும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இவர் மீது டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறையும் சிபிஐயும் வழக்கு பதிவு செய்துள்ளன.
அமானுல்லா கானை டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்தது. பிறகு கடந்த மார்ச் மாதம் இவரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை: அமானுல்லா கான் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் சிபிஐ வழக்கில் தொடர்புடைய சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் அமானுல்லா கானுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அமானுல்லா கான் மற்றும் பிறருக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.