`சிகிச்சை பெறுபவரின் உறவினர் அல்லாதவர்கள் தாமாக முன்வந்து உறுப்பு தானம் செய்ய வரும்போது, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுப்பது சட்ட விரோதம்’ என சென்னை உயர் நீதிமன்றம் கடுகடுத்திருக்கிறது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த டாக்டரான காஜா மொய்னுதீன் என்பவருக்கு சிறுநீரம் செயலிழந்திருக்கிறது. இதனால் காஜா மொய்னுதீனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரிடம், `சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை’ செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருக்கின்றனர். மேலும், அவரின் மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து சிறுநீரகம் பெறமுடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. அந்த நிலையில், ராமாயி என்பவர் காஜா மொய்தீனுக்கு சிறுநீரக தானம் செய்ய முன்வந்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து காஜா மொய்னுதீனும் சிறுநீரக மாற்று அறுவை சிகிக்கை செய்வதற்காக ஒவ்வொரு மருத்துவமனையாக ஏரி இறங்கியிருக்கிறார். ஆனால், ராமாயி என்பவர் காஜா மொய்னுதீனின் ரத்த சொந்தம் இல்லை என்பதால்… அதாவது உறவினர் இல்லை என்பதால், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.

இதனால், வேறுவழி இல்லாமல் கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையை காஜா மொய்னுதீன் நாடியிருக்கிறார். மருத்துவமனை நிர்வாகம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்ய முன்வந்திருந்தபோதும், தமிழ்நாடு அரசிடமிருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான `தடையில்லா சான்றை’ பெற்றுவரும்படி காஜா மொய்னுதீன் குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால், டாக்டர் காஜா மொய்னுதீன், தனக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான `தடையில்லா சான்று’ வழங்கவேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்றைய தினம் இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் காஜா மொய்னுதீன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.காஜா முகைதீன் கிஸ்தி ஆஜராகி வாதிட்டார்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டத்தில், உறவினர்கள் மட்டுமே உறுப்புகளை தானம் செய்ய முடியும் எனக் கூறப்படாத நிலையில், பல உயிர்களைக் காப்பாற்றிய டாக்டர் இன்று தனது உயிரைப் பாதுகாக்க முடியாத நிலையில் போராடி வருகிறார்” என வேதனை தெரிவித்தார். மேலும், “உறவினர்கள் அல்லாதவர்களும் உடல் உறுப்பு தானம் செய்ய விதிகளில் வழிவகை செய்யப்பட்டு, அவை நடைமுறையில் உள்ளபோதும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுப்பது சட்டவிரோதம்!” என கண்டித்தார்.

அதைத் தொடர்ந்து, “மனுதாரர் காஜா மொய்னுதீனும், அவருக்கு சிறுநீரகம் நன்கொடையளிக்க முன்வந்திருப்பவரும் (ராமாயி) ஒருவாரத்தில் மருத்துவக் குழு முன்பாக ஆஜராக வேண்டும். அவர்களிடம் சிறுநீரக நன்கொடை குறித்து கோயம்புத்தூர் தாசில்தாரர் உரிய விசாரணை மேற்கொண்டு, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்ட விதிகளின்கீழ் அதற்கான அங்கீகார குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கைமீது அங்கீகாரக் குழு, நான்கு வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்!” எனக் கேட்டுக்கொண்ட நீதிபதி, “போதிய சட்ட விழிப்புணர்வு இல்லாததால், உறவினர் அல்லாதவர் உறுப்பு தானம் அளிக்க முன்வரும்போது, மருத்துவமனை நிர்வாகங்கள் அறுவை சிகிச்சை செய்ய தயக்கம் காட்டுகின்றன. இது மனிதாபிமானமற்ற செயல். எனவே, இது குறித்து மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தமிழ்நாடு அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!” என உத்தரவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.