எதிர்ப்புகளுக்குப் பணிந்தது 'லியோ': டிரைலரில் 'கெட்ட' வார்த்தை நீக்கம்

விஜய் நடித்து அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள படம் 'லியோ'. இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த டிரைலரில் ஒரு மோசமான கெட்ட வார்த்தையை விஜய் பேசியிருந்தார். டிரைலரில் இடம் பெற்ற அந்த வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. டிவிக்களில் விவாதம் நடத்தும் அளவிற்குச் சென்ற அந்த வார்த்தையை அந்தக் கதாபாத்திரம்தான் பேசுகிறது என சமாளித்தார் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் நேற்றிரவு அந்த வார்த்தையை டிரைலரில் மியூட் செய்துவிட்டார்கள். படத்திற்கான சென்சார் சான்றிதழ் இரண்டு தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. அதில் அந்த கெட்ட வார்த்தையை படத்திலிருந்து நீக்கியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. படத்தில் அந்த வார்த்தை நீக்கப்பட்டதால் டிரைலரிலிருந்தும் நீக்கியிருக்கிறார்கள். இதனால், 'லியோ' டிரைலருக்கு எழுந்த சர்ச்சைக்கு தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, 'நா ரெடிதான்' பாடலுக்கு நடனமாடியதற்கு இன்னும் சம்பளம் தரவில்லை என சில நடனக் கலைஞர்கள் நேற்று தயாரிப்பு நிறுவனத்தை முற்றுகையிட்டனர். ஆனால், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிட்டதாக பெப்ஸி சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 'லியோ' படத்தின் தொடர் சர்ச்சையில் தற்போது இந்த சர்ச்சை இருந்து வருகிறது. இதற்கடுத்து என்ன சர்ச்சை எழும் என்று இனிமேல்தான் தெரியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.