உத்தரகன்னடா : கோகர்ணாவுக்கு சுற்றுலா சென்று, கடலில் விளையாடும் போது, அலைகளில் சிக்கிய எட்டு பேரை, உயிர் காப்பு படையினர் மீட்டனர்.
ஹூப்பள்ளியை சேர்ந்தவர்கள் பரசுராம், 33, ருக்மிணி, 38, தீரஜ், 14, அக்ஷரா, 14, குஷி, 12, தீபிகா, 12, நந்த கிஷோர், 10, எல்.வி.பாட்டீல், 30. இவர்கள் நேற்று மதியம், உத்தரகன்னடாவின் பிரசித்தி பெற்ற கோகர்ணாவுக்கு சுற்றுலா வந்திருந்தனர்.
கடற்கரைக்கு வந்த இவர்கள், கடலில் குதித்து நீச்சலடித்து விளையாடினர். அப்போது ராட்சத அலைகளில் சிக்கினர். உதவி கேட்டு கூச்சலிட்டனர். இதை கவனித்த உயிர் காப்பு படை ஊழியர்கள், அபாயத்தில் சிக்கியிருந்த எட்டு பேரையும் காப்பாற்றினர்.
இது தொடர்பாக, கோகர்ணா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. சில நாட்களாக, வானிலை மாற்றம் ஏற்பட்டதால், கடலில் சீற்றம் காணப்படுகிறது. அவ்வப்போது ராட்சத அலைகள் எழுகின்றன. எனவே சுற்றுலா பயணியர், கடலுக்குள் இறங்க வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்காங்கே எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணியர், எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கடலில் இறங்கி, அபாயத்தில் சிக்குகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement