'மனித உரிமைகளுக்கு என்ன ஆனது..?' – துருக்கி அதிபர் எர்டோகன் கேள்வி

அங்காரா,

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து ராக்கெட்டுகள், வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடுத்த போர் உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் பேசியதாவது:-

இஸ்ரேலுக்கு அமெரிக்கா விமானம் தாங்கி போர்க்கப்பலை அனுப்பியிருக்கிறது. அமெரிக்காவுக்கு இஸ்ரேலில் என்ன வேலை. காசாவிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குண்டுமழை வீசுவதற்கே அமெரிக்கா இந்த வேலையில் இறங்கியிருக்கிறது. காசாவுக்குள் தண்ணீர் செல்லும் பாதைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் மருத்துவமனைகள் செயல்படும் நிலையில் இருக்கின்றனவா என தெரியவில்லை.

துரதிர்ஷ்டவசமாக, வழிபாட்டுத்தளங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என கருணையின்றி குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. உலகம் இதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. யாரும் எதுவும் சொல்வதில்லை. மனித உரிமைகளுக்கு என்ன ஆனது?. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.