ஜெருசலேம்,
Live Updates
-
11 Oct 2023 12:47 PM GMT
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை
இஸ்ரேல் மற்றும் காசாவில் நடந்து வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் உற்பத்தியை சீர்குலைக்கும் என்ற கவலை எழுந்துள்ளதை அடுத்து உலக அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. சர்வதேச பெட்ரோலிய கச்சா எண்ணெய்களில் ஒன்றான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 2.25 டாலர் அதிகரித்து 86.83 டாலராக இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் பெட்ரோலியப் கச்சாப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
-
11 Oct 2023 12:36 PM GMT
இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா ஊழியர்கள் பலி
இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா. ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
11 Oct 2023 8:22 AM GMT
லெபனான், சிரியா எல்லையில் அமைதி நிலவுகிறது – இஸ்ரேல் ராணுவம்
லெபனான், சிரியா எல்லையில் அமைதி நிலவுகிறது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனாலும், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ள எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
-
11 Oct 2023 8:10 AM GMT
காசாவில் மின் வினியோகம் முழுவதும் தடைபடும் அபாயம்…!
காசா முனைக்கு மின் வினியோகம் செய்யும் நிறுவனங்களிடம் உள்ள எரிபொருள் வேகமாக குறைந்து வருவதால் மின் வினியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் காசாவில் மின் வினியோகம் முழுவதும் தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
-
11 Oct 2023 7:09 AM GMT
காசா எல்லையில் 3 லட்சம் வீரர்கள் குவிப்பு – தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்…!
காசா எல்லையில் இஸ்ரேல் 3 லட்சம் வீரர்களை குவித்துள்ளது. மேலும், ராணுவ டாங்கிகள், ஆயுதங்களை இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் காசா எல்லையில் குவித்துள்ளனர். இதன் மூலம் காசா முனை மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவது உறுதியாகியுள்ளது.
-
11 Oct 2023 6:07 AM GMT
5ம் நாளாக நீடிக்கும் போர்:-
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இன்று 5ம் நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் இதுவரை 900 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.
-
11 Oct 2023 5:43 AM GMT
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.
அதேவேளை, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்றே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் சில ஆயுதக்குழுக்களும் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே, ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கடந்த 7ம் தேதி காலை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின. தாக்குதல் தொடங்கிய முதல் 20 நிமிடங்களில் காசா முனையில் இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தரைவழி, வான்வழி, கடல்வழியாக ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். ஆபரேஷன் அல் அக்சா வெள்ளம் என்ற பெயரில் காசா முனை அருகே உள்ள இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.
இந்த கொடூர தாக்குதலை பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களில் நேரலையில் ஒளிபரப்பும் செய்துள்ளனர். வீடுகளுக்குள் புகுந்து இஸ்ரேலியர்களை கொடூரமாக கொலை செய்யும் வீடியோக்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் சமூகவலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. மேலும், இளம்பெண்ணை கொலை செய்து அவரது உடலை நிர்வாணமாக காரில் கொண்டு செல்லும் வீடியோவும் சமூகவலைதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பொதுமக்கள், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர், குழந்தைகள், பெண்கள் என பலரையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணை கைதிகளாக சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைகைதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் காசா முனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல் பதிலடி தாக்குதல் தொடங்கியது. இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த பயங்கரவாதிகளை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது. மேலும், காசாவுடனான எல்லைப்பகுதியை இஸ்ரேல் பாதுகாப்புப்படை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஆனாலும், எல்லையில் உள்ள பாதுகாப்பு வேலிகள் தகர்க்கப்பட்டுள்ளதால் காசாவில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளனர். இதனால், இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை வீழ்த்தும் நடவடிக்கையில் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இதுவரை 1,200 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 900 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து காசா முனைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம், குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியது. மேலும், மேற்குகரை பகுதியுடனான எல்லையும் மூடப்பட்டது. காசா முனை எல்லைப்பகுதியில் சுமார் 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது. இதன் மூலம் காசா முனை மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இன்று 5ம் நாளாக நீடித்து வருகிறது.