வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் குடிநீர் விநியோகம்

அண்மையில் பெய்த கடும் மழையினால் பாதிக்கப்பட்ட காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்களுக்கு பதினைந்தாயிரம் (15,000) குடிநீர் போத்தல்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திலுள்ள இராஜாங்க அமைச்சில் (ஒக்டோபர் 10) இடம்பெற்றது.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குடிநீர் வளங்கள் கடுமையாக மாசுபட்டுள்ளதால், தற்போது காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மக்களின் குடிநீர் தேவைக்கு உடனடி நிவாரணமாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் இந்த தண்ணீர் போத்தல்களை வழங்கியுள்ளது என இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் ஜகத் அபயசிங்க தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களுக்குப் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாலும், இப்பகுதிகளில் கல்வி மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாலும் இம்மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) உதவியையும் பெற்றுக்கொள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கலாநிதி அமில கங்காணமகே மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிகச் செயலாளர் கே.ஜி.தர்மதிலக ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.