Doctor Vikatan: நடிகை ஸ்ரீதேவி மரணத்துக்கு காரணமான low salt diet; உப்பை குறைப்பது உயிரைப் பறிக்குமா?

Doctor Vikatan: பொதுவாக அதிக உப்புதான் ஆபத்து என கேள்விப்பட்டிருக்கிறோம். நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தின் பின்னால் அவர் மிகக் குறைந்த அளவு உப்பு சேர்த்த உணவுப்பழக்கத்தைப் பின்பற்றியதுதான் காரணம் என ஒரு செய்தியில் பார்த்தேன். உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானதுதானே…. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதுமானது. இதைவிட அதிகம் சேர்த்துக்கொள்வதும் குறைவாகச் சேர்த்துக்கொள்வதும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான தாதுக்களில் ஒன்று சோடியம். உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் சோடியம் அவசியம். செல்களின் இயக்கத்துக்கு உதவி, உடலின் திரவ அளவைத் தக்கவைத்து, உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையையும் பராமரிக்க சோடியம் முக்கியம். எலக்ட்ரோலைட் சமநிலை பாதிக்கப்பட்டால் பக்கவிளைவுகள் வரும். தலைவலி, சோர்வு, தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் வரும்.

சோடியம் தவிர்த்த அதாவது உப்பை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் என்பது ஆபத்தில் முடியலாம். ஆனால் பொதுவாக உப்பை மிகக் குறைந்த அளவு சேர்த்துக்கொள்வதுதான் ஆரோக்கியமானது என அறிவுறுத்தப்படுகிறது. மற்றபடி சிறிதுகூட உப்பு சேர்க்காத உணவுப்பழக்கத்தை மருத்துவர்கள் அறிவுறுத்த மாட்டார்கள்.

உப்பு

ஒருவரின் சிறுநீரகங்கள் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், மிகக்குறைந்த அளவு உப்பு சேர்த்த உணவுப்பழக்கத்தைப் பின்பற்றும்போது சிறுநீரகங்கள், சிறுநீரின் வழியே வெளியேற வேண்டிய உப்பை, மறுபடி உட்கிரகித்துக்கொள்ளும். அதாவது உப்பு வெளியேறுவதைக் குறைத்து சோடியத்தை உடலிலேயே தங்கச் செய்துவிடும். எனவே கிட்னி ஆரோக்கியமாக இருப்பவர்கள், லோ சால்ட் டயட்டின் மூலம் பிரச்னையைத் தேடிக்கொள்ள வேண்டியதில்லை.

முதியோர், சிலவகை மருத்துவ சிகிக்சைகளில் இருப்பவர்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், புரத அளவு குறைவாக உள்ளவர்களுக்கெல்லாம் ரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைந்து பிரச்னையை ஏற்படுத்தலாம். சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக உள்ள, இள வயதினருக்கு இந்தப் பிரச்னை வராது. அப்படி அவர்களுக்குப் பிரச்னை வருகிறது என்றால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். அதாவது கீட்டோ டயட், புரதம் குறைந்த டயட், உப்பே இல்லாத டயட் போன்றவற்றைப் பின்பற்றுவோராக இருந்திருக்கலாம்.

இதய நலம்

உப்பு குறைத்த உணவுப்பழக்கம் என்பது இதயநோயாளிகள், உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் போன்றோருக்குப் பரிந்துரைக்கப்படும். உப்பு அதிகம் சேர்த்த உணவுகளைச் சாப்பிடுவோருக்கு உடல் வீக்கம், முகத்தில் வீக்கம், கால்களில் வீக்கம் போன்றவை வரலாம். அதிகப்படியான உப்பு உடலில் நீரைத் தக்கவைத்துக்கொள்ளும். அதே நேரம் மிகக் குறைந்த அளவு உப்பு சேர்த்த உணவுகளை உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

தேவையில்லாமல் உப்பு குறைந்த உணவுப்பழக்கத்தைப்  பின்பற்றுவோருக்கு’ஹைப்போனட்ரெமியா’ ( hyponatremia) என்ற பாதிப்புகூட வரலாம். இதன் தீவிரத்தைப் பொறுத்து அறிகுறிகளும் பாதிப்புகளும் வேறுபடும். மயக்கம், தலைச்சுற்றலில் தொடங்கி, பாதிப்பு தீவிரமான நிலையில் மூளை பாதிப்பு, கோமா போன்ற ஆபத்துகளில்கூட முடியலாம். எனவே உங்களுக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறு இருந்து, உங்கள் மருத்துவர் உப்பு குறைவாகச் சாப்பிட அறிவுறுத்தியிருந்தால் தவிர, தேவையின்றி, அதைப் பின்பற்ற வேண்டாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.