IND vs AFG: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (ICC World Cup 2023) என்றாலே விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது, மோதலுக்கும் பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இந்தியா என உலகின் முன்னணி அணிகள் மோதும் தொடர் என்பதால் போட்டிக்கு போட்டி பரபரப்பாகவே இருக்கும்.
IND vs AFG | பிளேயிங் லெவனில் மாற்றம்?
அந்த வகையில், இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே அசுர பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை சேப்பாக்கத்தில் வீழ்த்தி, வெற்றியை ருசி பார்த்தது. நீண்ட நெடிய தொடர் என்பதால் முதல் போட்டியிலேயே வெற்றி என்பது பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அணிக்கு வழங்கியுள்ளது எனலாம். இதையடுத்து, இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று விளையாட இருக்கிறது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை (India vs Afghanistan) எதிர்கொள்கிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இன்று ஒரே ஒரு மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. மைதானம் சிறியது என்பதால் ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை இந்தியா எடுக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, அஸ்வினுக்கு பதில் முகமது ஷமி இன்று விளையாட வாய்ப்புள்ளது. கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் ஆப்கனுக்கு எதிராக ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது நினைவுக்கூரத்தக்கது.
மோதலுக்கு தயாரா…
ஆப்கான் அணியில் இப்ராகிம் ஷத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் பேட்டிங்கில் மிரட்ட அனுபவ வீரர் நபி பேட்டிங் – பந்துவீச்சு என இரண்டிலும் கலக்குகிறார். ஆப்கன் அணி என்றாலே அதன் சுழற்பந்துவீச்சு வீச்சுதான் அனைவரின் நினைவுக்கும் வரும். ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது ஆகியோர் உலகத் தர சுழற்பந்துவீச்சாளர்களாக உள்ளனர்.
குறிப்பாக, இந்திய தொடக்க கட்ட பேட்டர்களை தடுமாற வைக்கும் இடதுக வேகப்பந்துவீச்சாளர்களாக ஃபரீத் அகமத், ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோரும் உள்ளனர். இப்படி இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டியில் எதிர்பார்க்க பல விஷயங்கள் இருந்தாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பது விராட் கோலி – நவீன் உல் ஹக் (Virat Kohli vs Naveen Ul Haq) ஆகியோருக்கு இடையிலான மேட்ச்-அப் தான்.
விராட் கோலி – நவீன் மோதல் கதை
இந்த கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும், அதை நினைவுக்கூறுவது முக்கியமாகும். கடந்த 2023 ஐபிஎல் சீசனில் பெங்களூரு – லக்னோ அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியின் முடிவில் விராட் கோலிக்கும், நவீனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பிரச்னை விராட் கோலி – நவீன் உல் ஹக் – கௌதம் கம்பீர் என நீண்ட நாளுக்கு பேசுப்பொருளாகவே இருந்தது.
இந்த பிரச்னை அன்று மைதானத்தை தாண்டி தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் எதிரொலித்தது. நவீன், விராட் கோலி ஆகியோரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி உள்ளிட்ட பதிவுகள் மறைமுகமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வகையில் இருந்தன. மேலும், இந்திய ரசிகர்களும் நவீன் உல் ஹக் (Naveen Ul Haq) மைதானத்தில் பீல்டிங் செய்யும்போதெல்லாம் ‘விராட் கோலி’ என்ற கோஷத்தை எழுப்பி, அவருக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
டெல்லி விராட் கோலி கோட்டை
தரம்சாலாவில் கடந்த சில நாள்களுக்கு முன் நடந்த வங்கதேச அணியுடனான லீக் போட்டியின் போது கூட மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் நவீன் உல் ஹக்கை நோக்கி விராட் கோலி என்ற கோஷத்தை எழுப்பியதாக தகவல்கள் வெளியாகின. அப்படியிருக்க டெல்லி விராட் கோலியின் சொந்த மண்ணாகும். அங்கு மற்ற இடங்களை போலவே விராட் கோலிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.
எனவே, இன்றைய போட்டியின்போது, விராட் கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நவீன் உல் ஹக்கை நோக்கிய பார்வையாளர்களின் கோஷம் இன்று அதிகமாகவும் இருக்கலாம், இது போட்டியிலும் எதிரொலிக்கலாம் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டியில் அன்றைய மோதலுக்கு பின் விராட் கோலி (Virat Kohli), நவீன் உல் ஹக் ஆகியோர் தற்போதுதான் எதிரெதிரே விளையாட உள்ளனர்.
அனல் பறக்கப்போகும் போட்டி
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நவீன் 5 ஓவர்களில் 31 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். 10ஆவது வீரராக பேட்டிங் செய்த அவர் டக்-அவுட்டானார். மறுபுறம், விராட் கோலி ஆஸ்திரேலியாவிடம் இந்தியா திணறிக்கொண்டிருந்த போது, நிதானமாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் 85 ரன்களை எடுத்திருந்தாலும், மைதானத்தில் அவர் காட்டும் எனர்ஜியே இந்திய அணிக்கு மிகுந்த ஊக்கத்தை தருவதாக கூறப்படுகிறது.