புதுச்சேரி: “கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக ரூ.1600 கோடி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். நல்ல குடிநீர் தொடர்ந்து கிடைக்க இம்முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் காலாப்பட்டு தொகுதியைச் சேர்ந்த எத்திட்டத்திலும் பயன் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. துறை இயக்குநர் முத்துமீனா வரவேற்றார். அமைச்சர் தேனீஜெயக்குமார் தலைமை வகித்தார். தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. காலாப்பட்டின் மிகப்பெரிய குறை இதுதான். பிள்ளைச்சாவடி பகுதிகளில் 2 மீ வரை தண்ணீர் வருகிறது. காலாப்பட்டில் கல் கொட்ட ரூ.56 கோடி செலவிட திட்டமிட்டு விரைவில் பணிகள் முழுவதும் நடந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர் ஆலோசனை கேட்டு பணிகளைத் துவங்க உள்ளோம்.