புதுடில்லி :கடந்த இரு தினங்களாக உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் கருக்கலைப்பு வழக்கில், ‘கருக்கலைப்பு செய்ய தாய்க்கு உரிமை உள்ளது போலவே, பிறந்தால் வாழும் சாத்தியமுள்ள குழந்தைக்கும் உயிர் வாழ உரிமை உள்ளது. இவை இரண்டையும் சமநிலையில் பார்க்க வேண்டும். சிசு கொலையை எங்களால் பரிந்துரைக்க முடியாது’ என, த லைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரரிடம் பேசி சமரச ம் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தனர்.
புதுடில்லியைச் சேர்ந்த, 27 வயது திருமணமான பெண், தன் வயிற்றில் வளரும், 26 வார கருவை கலைக்க அனுமதி அளிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. இரண்டாவது குழந்தையை கடந்த ஆண்டு செப்., மாதம் பிரசவித்தார்.
பிரசவத்திற்கு பின் ஏற்பட்ட மன சோர்வு மற்றும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாலும், பொருளாதார ரீதியாக மூன்று குழந்தைகளை வளர்க்க முடியாத காரணத்தாலும், கருவை கலைக்க அனுமதி கோரினார்.
விசாரணை
இந்த மனு, நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண்ணின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது.
பெண்ணை பரிசோதித்த மருத்துவக்குழு, கருக்கலைப்பு செய்யலாம் என, தெரிவித்தது. இதன் அடிப்படையில், கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், மத்திய அரசு தரப்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கருக்கலைப்பு விஷயத்தில் எய்ம்ஸ் மருத்துவக் குழுவுக்கு குழப்பம் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.
மேலும், பெண்ணின் வயிற்றில் வளரும் கரு, சிசுவாக உருவெடுத்துவிட்டதால், கருக்கலைப்பு செய்வது சிசு கொலைக்கு சமமாக அமைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை நீதிபதி, இந்த வழக்கில் முந்தைய தீர்ப்பளித்த இரு நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணையை மாற்றினார். இந்த வழக்கு, நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, பி.வி.நாகரத்னா அமர்வு முன் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒரு நீதிபதி கருக்கலைப்பு செய்ய அனுமதி அளித்தும், மற்றொரு நீதிபதி அனுமதி மறுத்தும், இருவேறு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அறுவை சிகிச்சை
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி வாதிடுகையில், ”கருவுற்ற பெண் மன ரீதியிலும், உடல் ரீதியிலும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்.
”குழந்தையை பெற்றெடுப்பதா, வேண்டாமா என்பது குறித்து குழப்பத்தில் உள்ளார். அவரிடம் நாங்கள் பேசிப் பார்த்தோம். குழந்தையை தத்துக் கொடுக்கலாம் என யோசனை கூறினோம். ஒரு கட்டத்தில் குழந்தையை பெற்றெடுக்க ஒப்புக் கொண்டார்,” என, வாதிட்டார்.
‘இதைக்கேட்ட நீதிபதிகள், ‘குழந்தையின் இதயத்துடிப்பை நிறுத்தும்படி நாங்கள் உத்தரவிட வேண்டுமா?’ என, கேள்வி எழுப்பினர்.
இதற்கு மனுதாரர் தரப்பு பதில் அளிக்கையில், ‘குழந்தையை பெற்றுக் கொள்ள தயாராக உள்ளோம். ஆனால், கர்ப்ப காலம் முடியும் வரை காத்திருக்க முடியாது. இப்போதே அறுவை சிகிச்சை வாயிலாக பிரசவம் பார்க்க அனுமதி அளிக்க வேண்டும்’ என, கோரினர்.
இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்காக நீங்கள் ஆஜராகி உள்ளீர்கள். அரசு தரப்பில் ஐஸ்வர்யா பாத்தி ஆஜராகி உள்ளார். இன்னும் பிறக்காத அந்த குழந்தைக்கு ஆஜராவது யார்?
கருக்கலைப்பு செய்ய மனுதாரருக்கு உள்ள உரிமையை போலவே, பிறந்தால் உயிர்வாழும் சாத்தியமுள்ள குழந்தைக்கும் உயிர் வாழ உரிமை உள்ளது. இவை இரண்டையும் சமநிலையுடன் பார்க்க வேண்டியது அவசியம்.
குழந்தையை கொல்ல வேண்டாம் என்பதில் மனுதாரர் தெளிவாக இருக்கிறார். அவர் கோரிக்கைப்படி இப்போதே அறுவை சிகிச்சை செய்தால், குழந்தை குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில வாரங்கள் காத்திருந்தால் ஆரோக்கியமாக பிறக்கும்.
குழந்தையின் உயிரை பறிக்கும்படி நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? எனவே, இதுகுறித்து மனுதாரரிடம் கலந்து பேசிவிட்டு வாருங்கள்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணை இன்றும் தொடர்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்